காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் 23 ந் தேதி முதல், மூன்று நாட்கள் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இன்று கரூர் வருகை புரிந்த ராகுல்காந்திக்கு சின்னதாராபுரம் பகுதியில் காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து கரூர் பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களிடம் ராகுல்காந்தி உரையாற்றினார். அப்போது அவர்,
"தமிழகத்தைப் பற்றி இன்னும் நான் புரிந்துகொள்ள விரும்புகிறேன். இதற்காகவே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான திருக்குறளை வாசிக்கத் தொடங்கியுள்ளேன். தமிழகத்தின் ஆன்மா என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. நம்பிக்கை, சுயமரியாதை தமிழக மக்களுக்குப் புதிதல்ல. இது மொழியிலும் கலாச்சாரத்திலும் வாழ்க்கையோடும் இரண்டறக் கலந்துள்ளது. ஆனால் பிரதமர் மோடி இதை மதிப்பதே இல்லை. இந்த திருக்குறள் புத்தகத்தை பிரதமர் மோடி பிரித்துக் கூட பார்த்திருக்க மாட்டார். இந்தப் புத்தகத்தை மட்டும் படித்திருந்தால் தமிழக மக்களின் கலாச்சாரம், பண்பாடு பற்றி புரிந்திருப்பார். தமிழர்களின் உணர்வுகளையும் கலாச்சாரத்தையும் புரிந்துகொள்ள இதை விட வேறு வழி இல்லை.
அன்பைச் செலுத்தினால் தமிழக மக்கள் இருமடங்காக திருப்பிச் செலுத்துவார்கள். ஆனால் பிரதமர் மோடியோ 'ஒரே தேசம்', ஒரே கலாச்சாரம்', 'ஒரே வரலாறு' எனச் சொல்லி மக்களை அவமதிக்கிறார். தமிழக மக்கள் பேசும் தமிழ் மொழி என்பது ஒரு மொழி இல்லையா? தமிழக மக்களுக்குப் பண்பாடு கலாச்சாரம் இல்லையா? இந்த வரலாற்றுக் கூறுகளை மறுப்பதற்கு யார் அந்த உரிமையை அவருக்கு கொடுத்தது? தமிழ்நாடு இந்தியாவிற்குள் தானே இருக்கிறது.
தமிழகத்தை ஆட்சி புரியும் இந்த அரசின் ஊழலை ஏன் இதுவரை சிபிஐ விசாரிக்கவில்லை? தன்னிடம் இருக்கும் ரிமோட் கன்ட்ரோல் மூலம் தமிழக அரசை பிரதமர் மோடியும் பா.ஜ.க.வும் இயக்குகிறது. வருகிற சட்டமன்றத் தேர்தலில் ரிமோட் மோடியாக இருந்தாலும் பேட்டரியாக இருக்கும் அ.தி.மு.க அரசை மக்கள் வீழ்த்தப் போகிறார்கள். ஆம் அந்த பேட்டரியை தமிழக மக்கள் கழட்டி எறியப் போகிறார்கள். மோடி ஐந்தாறு பெரும் தொழிலதிபர்களுக்காக வேலை செய்கிறார்.
தமிழக மக்களைப் பலவீனப்படுத்தும் வகையில் மோடி செயல்படுகிறார். மத்திய அரசை எதிர்த்து தமிழக முதல்வர் எந்தக் கேள்வியையும் கேட்பது இல்லை. ஏனென்றால் அவரது ஊழலில் இருந்து காத்துக் கொள்ளவே அவர் மவுனம் காக்கிறார். தி.மு.க. தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் மு.க.ஸ்டாலின் முதல்வராவார்" என்றார்.
இந்தச் சுற்றுப் பயணத்தின்போது ஒரு சிறுமியிடம் செல்ஃபி எடுத்துக் கொண்டார் ராகுல் ராகுல் காந்தி. அந்தச் சிறுமிக்கு இது பெரு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதேபோல் விவசாயிகளிடமும் பேசினார். இரவு திண்டுக்கல் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு டில்லிக்குப் பயணமாகிறார். ராகுல் காந்தியின் மூன்று நாள் தேர்தல் பரப்புரை மற்றும் எளிமையாக மக்களைச் சந்தித்தது என எல்லாமே மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் அதிக உற்சாகமடைந்துள்ளனர்.
அ.தி,மு.க.வுக்கு சாதகமான பகுதி என்று சொல்லப்படும் கொங்கு மண்டலத்தில், ராகுலின் பயணம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.