Skip to main content

''ராகுல் காந்தியே வருக நல்லாட்சி தருக'';ராகுல் காந்தியை பிரதமராக்குவோம்- ஸ்டாலின் பேச்சு!

Published on 16/12/2018 | Edited on 16/12/2018

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞரின் வெண்கல திருவுருவச் சிலையை திறந்து வைத்த பிறகு மெரினாவில் உள்ள கலைஞரின் நினைவிடத்திற்கு சென்று சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பல முக்கிய தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர். அந்த மலரஞ்சலி நிகழ்விற்குப் பிறகு சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தி பேசிய திமுக தலைவர் ஸ்டாலின்,

 

 

Rahul Gandhi to be PM - Stalin talks!

 

நான் இன்று மிகுந்த மகிழ்ச்சியில் பூரித்து போயிருக்கிறேன், திளைத்துப்போய் நின்றிருக்கிறேன். காரணம் தமிழர்களுடைய வாழ்விலும், வளர்ச்சியிலும் இன்று முக்கியமான நாள். மறக்கமுடியாத நாளும் கூட, இக்கட்சி தோற்றுவிக்கப்பட்ட தினம், தந்தை பெரியார் பிறந்த நாள், அறிஞர் அண்ணா பிறந்தநாள், திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய நாள், நமது தலைவர் கலைஞர் பிறந்தநாள், அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்ட நாள், இந்த புகழ்மிக்க வரிசையிலே கலைஞர் சிலை திறப்பு விழா நாளும் இணைந்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். திமுகவின் அரசியல் வரலாற்றில் மிக மிக முக்கியமான நாள் மட்டுமல்ல, என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத நாள் இந்த நாள். 

 

 

1971 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சராக கலைஞர் இருந்தபொழுது, தந்தை பெரியார் அவர்கள் நம்முடைய தலைவர் கலைஞருக்கு சிலை வைத்திட வேண்டும் என முடிவு செய்து அதற்காக ஒரு குழு ஒன்றை அமைத்தார். அந்தக் குழுவிற்கு புரவலராக தந்தை பெரியார் அவர்களே பொறுப்பேற்றார். அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் பெரியார் அவர்கள் மறைந்தார்கள். பின்னால் மணியம்மையார் அவர்கள் அந்த பொறுப்பை ஏற்று  கலைஞருடைய சிலையை அண்ணாசாலையில், எல்ஐசி கட்டிடத்திற்கு அருகில் வைத்த சம்பவம் அனைவருக்கும் தெரியும். அதற்குப் பிறகு அந்த சிலை விவகாரம் என்ன என்பது உங்களுக்குப் புரியும்.

 

D

 

இன்றைய தினம் நம்முடைய தலைவர் கலைஞருக்கு திறக்கப்பட்டுள்ள சிலை அண்ணாவின் அருகிலே ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்ற அவருக்கு நாளெல்லாம் அண்ணா... அண்ணா... என்று உருகிய தலைவருக்கு, அண்ணா சாலையில், அண்ணா அறிவாலயத்தில், அண்ணா சிலைக்கு அருகில் நம்முடைய தலைவர் கலைஞருடைய சிலை அமைக்கப்பட்டிருக்கிறது மகிழ்ச்சிகரமானது.

 

 

தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடி தன்னை பிரதமர் என்று நினைக்காமல் ஏதோ பரம்பரை மன்னர் ஆட்சி நடத்துவதாக மமதை கொண்ட பிரதமராக மோடி இருக்கிறார். தன்னை பிரதமராக மட்டுமல்ல ஜனாதிபதியாக, தன்னை உச்சநீதிமன்றமாக, தன்னையே ரிசர்வ் வங்கியாக, தன்னையே சிபிஐயாக, தன்னையே வருமானத்துறையாக நினைத்துக்கொண்டிருக்கிறார். அதனால்தான் அனைத்து கட்சிகளும் சேர்ந்து நரேந்திரமோடிக்கு எதிராக ஒன்று திரண்டு இருக்கிறோம். இது ஏதோ நரேந்திரமோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக அல்ல நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக சேர்ந்திருக்கிறோம்.

 

 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவோடு மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும்போதெல்லாம் நம்முடைய தமிழ்நாட்டு மக்களுக்கு எவ்வளவு திட்டங்களை சாதனைகளை நாம் படைத்திருக்கிறோம். மண்டல் கமிஷன் அமைக்கப்பட்டது, நம் மொழி தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தரப்பட்டது, சேது சமுத்திரத் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் தற்போதைய பிரதமர் சாடிஸ்ட்டாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர் மோடி என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. இந்த வார்த்தையை நான் பயன்படுத்துகிறேன் என்று சொன்னால் அவ்வளவு பெரிய பேரழிவு நடந்து கொண்டிருக்கிறது. அண்மையில் கஜா புயலில் 65 பேர் இறந்தார்கள், 14 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு கேட்கப்பட்டிருக்கிறது. விவசாயிகள் பழைய நிலைமைக்கு வர வேண்டும் என்று சொன்னால் இன்னும் 20 ஆண்டுகள் ஆகும். இவ்வளவு பெரிய பேரிடர் குஜராத்தில், மகாராஷ்டிராவில் ஏற்பட்டிருந்தால் நரேந்திரமோடி சென்று சென்று பார்க்காமல் இருப்பாரா? மாட்டாரா? தமிழ்நாடு என்பதால் மறந்துவிட்டார். 

 

 

ஆள் வரவில்லை ஆனால் அடிக்கடி வெளிநாடு சுற்றுப்பயணம். ஒரு ஆறுதல், கவலை கொண்டேன் என்று ஒரு செய்தி அல்லது இரங்கல் தெரிவித்து ஏதேனும் ஒரு செய்தி உண்டா. அந்த அளவிற்கு தமிழ்நாடு என்ன பாவப்பட்டு கிடைக்கிறதா?. 2017ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் நாள் அமெரிக்காவில் துப்பாக்கி சூடு நடந்தது இறந்தவர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ட்விட் போடுகிறார். ஆனால் தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு ஆறுதல் கூட சொல்ல மறுக்கிறார். எனவேதான் அவரை  கொடூர மனப்பான்மை கொண்டவர் என நான் இங்கே பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். அவ்வளவு அலட்சியமா அதனால்தான் மோடியை வீழ்த்த வேண்டும் என்று சொல்கிறோம். 21 கட்சிகள் ஒன்று சேர்ந்து இருக்கின்றன, இன்னும் பல கட்சிகள் வரத்தான் போகிறது. இந்த நாடு பார்க்கத்தான் போகிறது. இந்த மேடையில் ராகுல் காந்தியை பிரதமராக முன்மொழிகிறேன் என்று கூறிய  ஸ்டாலின்  ராகுல் காந்தியே  வருக நல்லாட்சி தருக என்ற முழக்கத்துடன் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக ஆதரிக்க வேண்டும் எனக் கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்