விதிகளுக்கு புறம்பாக திமுக பொருளாளர் துரைமுருகனின் காட்பாடி வீட்டில் நள்ளிரவில் ரெய்டு நடத்தப்பட்டது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் மார்ச் 30-ம் தேதி பேசிய துரைமுருகன், நான் வேலூரில் பிரச்சாரத்தை முடித்தபோது எனக்கொரு தகவல் வந்தது. வீட்டுக்கு வருமானவரித்துறையை சேர்ந்தவர்கள் வந்துள்ளார்கள் எனச்சொல்லப்பட்டது. அங்கிருந்து மாவட்ட செயலாளருடன் நான் உடனடியாக வீட்டுக்கு வந்தேன். வீட்டுக்குள் மூன்று பேர் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் நீங்கள் யார் எனக் கேட்டேன், தேர்தல் கண்காணிப்பு அலுவலர் என ஒரு அட்டையை காட்டினார்கள். அதை எப்படி நம்புவது எனக் கேட்டோம். உடனடியாக புறப்பட்டு வெளியே சென்றார்கள். யாரிடமோ பேசினார்கள்.
பின்னர் ஒரு கார் வந்தது, ஃப்ளையிங் ஸ்குவாட் வந்துள்ளது, இப்போ என்ன சொல்லப்போறீங்க எனக் கேட்டார்கள். வரட்டும், இரவு 10 மணிக்கு மேல் ரெய்டு நடத்தக்கூடாது என சட்டம் உள்ளதே அது தெரியாதா எனக் கேட்டேன். அதோடு, என் வீட்டை சோதனையிட வாரண்ட் இருக்கிறதா எனக் கேட்டேன். ஆனால், அவர்களிடம் எதுவும் இல்லை. பின்னர் விடியற்காலை 3 மணிக்கு அவசரம் அவசரமாக ஒரு ஆர்டர் காப்பியை கொண்டுவந்து தந்தார்கள்.
வீட்டுக்குள் சென்று சோதனையிட்டுவிட்டு எதுவும் கிடைக்காமல் திரும்பி சென்றார்கள். இந்த ரெய்டு என்பது என் மகன் வேலூர் தொகுதியில் வெற்றி பெற்றுவிடுவான் என்கிற பயத்தில் எங்களை முடக்க ஏவப்பட்ட ரெய்டு. இதற்கெல்லாம் திமுக கடைமட்ட தொண்டன்கூட பயப்படமாட்டான், நானெல்லாம் பயந்துவிடுவேனா என்றவர்.
மத்திய – மாநில அரசின் ஆசி தனக்குள்ளது என்று அதிகாரிகளை தூண்டிவிட்டு இந்த ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. இந்த ரெய்டு மூலம் எங்களுக்கு உத்வேகம் தரப்பட்டுள்ளது வெற்றி நிச்சயம் என்றார்.
தேர்தல் நேரத்தில் இப்படிப்பட்ட ரெய்டுகள் நடத்துவது மிரட்டவே. இதுவே கடந்த மாதம் இப்படி என் வீட்டுக்குள்ளோ, கல்லூரிக்குள்ளோ வந்து ரெய்டு செய்திருந்தால் பேசியிருக்கமாட்டேன்; இப்போது செய்வது தோல்வி பயத்தால்தான் என்றார்.
முன்னதாக, ரெய்டு தகவலை கேள்விப்பட்டு நேற்று இரவு முதல் இந்த நிமிடம் வரை தூங்காமல் என் வீட்டுக்கு வெளியே நின்று இருந்த கலைஞரின் உடன்பிறப்புகள், தளபதியின் உடன்பிறப்புகள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.