Skip to main content

புழல் சிறையில் கைதிகள் அறையில் இருந்து 18 டிவி பெட்டிகள் பறிமுதல்

Published on 14/09/2018 | Edited on 14/09/2018
Jail



புழல் சிறையில் முதல் வகுப்பு அறையில் இருந்து 18 தொலைக்காட்சி பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
 

தமிழக சிறைச்சாலைகளில் செல்போன் புழக்கம் தாராளமாக இருப்பதாகவும், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கைதிகள் பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
 

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. புழல் ஜெயிலிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கைதிகளிடம் இருந்து செல்போன்கள், கஞ்சா உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
 

கைப்பற்றப்பட்ட செல்போன்களில் இருந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்மூலம் கைதிகள் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதும் அம்பலமாகி இருக்கிறது.

 

Luxury life


சிறையில் கைதிகள் தாங்கள் தங்கியிருந்த அறைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. செல்போன் மூலம் செல்பி எடுப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது. அதில், அறைக்குள் கட்டில் போடப்பட்டு அதில் சொகுசு மெத்தையும் விலை உயர்ந்த தலையணைகளும் போடப்பட்டு, உல்லாச விடுதிகளை போன்று கைதிகள் அறை அழகுப்படுத்தப்பட்டு, வண்ணமயமான திரைச் சீலைகள் தொங்க விடப்பட்டு உள்ளன.
 

டி-சர்ட், அரைக்கால் சட்டை ஆகியவற்றுடன் கூலிங்கிளாஸ் அணிந்தபடி உல்லாசமாக சுற்றுலா பயணம் மேற்கொள்வது போல டிப்-டாப்பாக உடைகளை அணிந்து, விலை உயர்ந்த ஷூக்களையும் கைதிகள் அணிந்து சிறைக்குள் போஸ் கொடுத்துள்ளனர்.
 

இதேபோல அலுவலங்களுக்கு மதிய உணவு எடுத்துச் செல்ல பயன்படுத்தும் டிபன்பாக்ஸ்களும் சிறைச் சாலைகளுக்குள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
 

அதில் விதவிதமான உணவு வகைகளும் உள்ளன. ஜெயிலுக்குள்ளேயே இந்த உணவு வகைகள் சமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எலக்ட்ரிக் குக்கர்களும் படத்தில் உள்ளன.

 

Luxury life


இந்த நிலையில் சென்னை புழல் சிறையில் ஏ.டி.ஜி.பி. அசுதேஷ் சுக்லா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், புழல் சிறையில் வெளியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஒரு மாதத்துக்கு முன் எடுக்கப்பட்டவை. புகைப்படங்கள் வெளியானது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.
 

கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக புகைப்படம் வெளியானதை தொடர்ந்து அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. புழல் சிறையில் முதல் வகுப்பு அறையில் இருந்து 18 தொலைக்காட்சி பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சிறைத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது 2 எப்.எம். ரேடியோக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

புழல் சிறையில் இருந்து தப்பிய பெண் கைதி கைது

Published on 16/12/2023 | Edited on 16/12/2023
Female prisoner who escaped from Puzhal Jail arrested

இந்தியாவிலேயே அதிக பாதுகாப்பு வசதிகளை கொண்ட சிறையாக கருதப்படும் புழல் சிறையில் இருந்தே பெண் கைதி ஒருவர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் தப்பிய பெண் கைதியை கைது செய்துள்ளனர்.

பெரிய சுற்றுச்சுவர்கள், போலீஸ் பாதுகாப்பு, சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பு என பல்வேறு வசதிகளைக் கொண்டது புழல் சிறை. சிறையின் நுழைவாயில் பகுதியிலேயே துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு என பல்வேறு கட்டுப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், புதன்கிழமை பெண் கைதி ஒருவர் புழல் சிறையில் இருந்து தப்பி சென்றது புழல் சிறை வட்டாரத்தையே கலங்கடிக்க செய்தது.

பெங்களூரைச் சேர்ந்தவர் ஜெயந்தி. இவர் வீடுகளில் புகுந்து திருடிய புகாரில் கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார். அரும்பாக்கம் சூளைமேடு பகுதியில், வீட்டில் திருட முயன்றபோது சூளைமேடு போலீசாரால் கைது செய்யப்பட்ட ஜெயந்தி, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், பெண்கள் சிறையில் இருந்த ஜெயந்தி புதன்கிழமை காலை சிறையில் இருந்து தப்பியது தெரியவந்தது.

இந்த விவகாரத்தில் சிறை வார்டன்கள் கோகிலா, கனகலட்சுமி ஆகிய இருவரை புழல் சிறை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில், பெண் கைதிகளுக்கான பார்வையாளர் அறையில் உள்ள கதவு வழியாக ஜெயந்தி தப்பியது தெரியவந்துள்ளது .

தொடர்ந்து ஜெயந்தியை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். இந்நிலையில், பெங்களூர் விமான நிலையம் அருகே உள்ள கங்கேரி என்ற இடத்தில் பதுங்கி இருந்த பெண் கைதி ஜெயந்தியை போலீசார் கைது செய்துள்ளனர். நேர்காணல் அறையை சுத்தம் செய்யும்போது, ஆண்கள் சிறை வழியாக ஜெயந்தி தப்பியது அவரிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

'வானொலிகள் மூலம் இந்தியை திணிப்பு'-பாமக ராமதாஸ் கண்டனம்

Published on 03/10/2022 | Edited on 03/10/2022

 

 'Imposition of Hindi through radio'-Pmk Ramadoss condemned


'காரைக்கால் வானொலி நிலையத்தின் பண்பலைவரிசையில் ஒலிபரப்பப்பட்டு வந்த தமிழ் நிகழ்ச்சிகளின் நேரத்தை குறைத்து விட்டு, தினமும் 4 மணி நேரம் இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. பிரசார் பாரதி நிறுவனத்தின் இந்த அப்பட்டமான இந்தித் திணிப்பு கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்' என பாமக நிறுவனர்  ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'காரைக்கால் வானொலியில் தினமும் காலை 5.-52 முதல் இரவு 11.20 மணி வரை 17.28 மணி நேரம் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில் எந்த முன்னறிவிப்புமின்றி,  நேற்று (அக்டோபர் 2) முதல் தமிழ் நிகழ்ச்சிகளின் நேரம் குறைக்கப்பட்டிருக்கிறது. காலையில் 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலையில் 3 மணி முதல் 5 மணி வரையிலும், இரவில் 9 மணி முதல் 10 மணி வரையிலும் மும்பை விவிதபாரதி நிலையத்தின் இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.

 

காரைக்கால் வானொலியில் தினமும் 4 மணி நேரத்திற்கு இந்தி நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதற்காக வானொலி நிலைய அதிகாரிகள் முன்வைக்கும் காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான நிகழ்ச்சி வடிவமைப்பை கொண்டு வரும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டிருப்பதாக வானொலி நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். மொழி, கலாச்சாரம், தொழில் முறை ஆகியவற்றில் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் ஒரே மாதிரியான வானொலி நிகழ்ச்சிகளை கொண்டு வருவதே வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் தத்துவத்திற்கு எதிரான செயல் ஆகும்.

 

அதுமட்டுமின்றி, இந்தி நிகழ்ச்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதன் நோக்கம் ஒரே மாதிரியான நிகழ்ச்சி வடிவமைப்பு என்பதைக் கடந்து இந்தியை திணிப்பது தான். இந்த முயற்சி இப்போது தொடங்கப்பட்டது அல்ல. 2014-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு விட்டது. அனைத்து மண்டல வானொலிகளில் ஒலிபரப்பாகும் வர்த்தக ஒலிபரப்பை உள்ளூர் வானொலி நிலையங்கள் மூலமாக மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்று அனைத்திந்திய வானொலியின் தலைமை இயக்குனர் கடந்த 06.08.2014 அன்று அனைத்து மண்டல வானொலி நிலையங்களுக்கும் அனுப்பிய கோப்பு எண் 13/20/2014/125 என்ற அந்த சுற்றறிக்கையில் கூறியிருந்தார். அதன்படி சென்னை வானொலி நிலையத்தின் கூடுதல் தலைமை இயக்குனர்,  20.10.2014 அன்று தருமபுரி, நாகர்கோவில் ஆகிய உள்ளூர் வானொலி நிலையங்களுக்கும், புதுச்சேரியில் காரைக்கால் வானொலி நிலையத்திற்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் 26.10.2014 ஞாயிற்றுக்கிழமை முதல் தினமும் 7 மணி நேரம் சென்னை மண்டல வானொலியின் வர்த்தக ஒலிபரப்பை உள்ளூர் வானொலிகள் மறு ஒலிபரப்பு செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

 

சென்னை வானொலி நிலையத்தின் வர்த்தக ஒலிபரப்பில் தினமும் 4 மணி நேரம் இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. இவற்றை தருமபுரி, நாகர்கோவில், காரைக்கால் ஆகியவற்றுக்கும் நீட்டிக்க வேண்டும் என்பது தான் அப்போது அனுப்பப்பட்ட சுற்றறிக்கையின் நோக்கம் ஆகும். ஆனால், அதை எதிர்த்து கடந்த 24.10.2014 அன்று நான் அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து அம்முயற்சி கைவிடப்பட்டது. அப்போது திட்டமிடப்பட்டவாறே தினமும் 4 மணி நேரத்திற்கு இந்தி நிகழ்ச்சிகளை காரைக்கால் வானொலி ஒலிபரப்பத் தொடங்கியுள்ளது. அடுத்தக்கட்டமாக தமிழ்நாட்டில் தருமபுரி, நாகர்கோவில் உட்பட இந்தியா முழுவதும் உள்ள 86 உள்ளூர் வானொலி நிலையங்களிலும் இத்தகைய  4 மணி நேர இந்தி நிகழ்ச்சிகள் திணிக்கப்படக் கூடும். இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

 

தருமபுரி, நாகர்கோவில், காரைக்கால் ஆகிய இடங்களில் உள்ளூர் வானொலிகள் தொடங்கப்பட்டதன் நோக்கமே அப்பகுதிகளில் உள்ள உழவர்களுக்கு வேளாண்மை குறித்த தகவல்களை தெரிவிக்கவும், கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு மீன்வளம், வானிலை முன்னறிவிப்பு போன்றவற்றை தெரிவிப்பதற்காகத் தான். காரைக்கால் வானொலி நிலையம் தொடங்கப்பட்ட போது செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, புதுவையில் பேசப்படும் மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், பிரெஞ்ச் ஆகிய மொழிகளில்  மட்டுமே நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட வேண்டும். இவற்றையெல்லாம் புறக்கணித்து விட்டு, 4 மணி நேரம் இந்தி நிகழ்ச்சிகளை திணிப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

 

கல்வியில் தொடங்கி கலாச்சாரம் வரை அனைத்திலும் இந்தியை திணித்து வரும் மத்திய அரசு, இப்போது வானொலிகள் மூலமாகவும் இந்தியை திணிப்பது நியாயமற்றது. உள்ளூர் மக்களின் உணர்வுகளை மதித்து, அவர்கள் விரும்பும் நிகழ்ச்சிகளை வழங்குவது தான் பிரசார்பாரதியின் கடமை ஆகும். அதற்கு மாறாக விருப்பமற்ற நிகழ்ச்சிகளையும், மொழிகளையும் திணிக்கும் போது அது வெறுப்பை ஏற்படுத்தும். இதை உணர்ந்து கொண்டு காரைக்கால் வானொலியில் 4 மணி நேரம் இந்தி நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதை நிறுத்தி விட்டு, வழக்கம் போல தமிழ் நிகழ்ச்சிகளையே ஒலிபரப்ப வேண்டும். தருமபுரி, நாகர்கோவில்  போன்ற மற்ற நிலையங்களுக்கு இந்தி நிகழ்ச்சிகளை நீட்டிப்பதையும் பிரசார் பாரதி கைவிட வேண்டும். இல்லாவிட்டால் காரைக்கால் வானொலி நிலையம் முன், அனைத்து தரப்பு மக்களையும் திரட்டி மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.