வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பத்தாபேட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர், வாணியம்பாடி வட்ட வழங்கல் அதிகாரி குமார் தலைமையிலான வருவாய்த்துறையினர். அப்போது, ஒரு இருசக்கர வாகனத்தின் முன்பகுதியில் சில மூட்டைகளை அடுக்கி வண்டியை ஒட்டிக்கொண்டு வந்துக்கொண்டுயிருந்தார். அதிகாரிகளை தூரத்திலேயே பார்த்தவன், வண்டியை கீழே போட்டுவிட்டு வந்த வழியே ஓடியுள்ளான்.
அதிகாரிகள் சந்தேகத்தோடு அந்த வண்டி கிடந்த பகுதிக்கு நடந்து வந்து பார்த்த போது, சில மூட்டைகள் இருந்தன. அதனை திறந்து பார்த்த போது, அவைகளில் இருந்து மக்களுக்கு நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் விலையில்லாத அரிசி என்பது தெரியவந்தது. உடனே அவைகளை பறிமுதல் செய்தனர். மூன்று மூட்டைகளில் மொத்தம் 200 கிலோ ரேஷன் அரிசி இருந்துள்ளது. அரிசி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர், தப்பி ஓடியது யார், சிக்கிய வண்டி யாருடையது? வண்டி உரிமையாளர் தான் அரிசி கடத்தினாரா? அல்லது வேறு நபரா? என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக காவல்நிலையத்திலும் புகார் தந்துள்ளனர். வண்டியின் பதிவு எண்ணை கொண்டு அது யார் பெயரில் உள்ளது என பார்த்து அவரை விசாரணைக்கு அழைக்க முடிவு செய்துள்ளனர். வாணியம்பாடியில் மட்டும் தினமும் நூறு கிலோ முதல் டன் கணக்கில் ரேஷன் அரிசி மூட்டைகள் சிக்குகின்றன. ஆனால் பெரும்பாலும் கடத்துபவர்கள் யார் என்பதை அதிகாரிகள் சொல்வதில்லை, அவர்களை கைதும் செய்வதில்லை என்கிற குற்றச்சாட்டு அதிகாரிகள் மீது எழுப்பப்படுகிறது. அதோடு, இவ்வளவு அரிசி ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாகத்தான் வாங்கியிருக்க முடியும் என சந்தேகிக்கின்றனர். இதுவரை எந்த கடை ஊழியரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.
வாணியம்பாடி தொகுதி என்பது தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபில் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்ற தொகுதி. அமைச்சர் குடியிருக்கும் நகரிலேயே டன் கணக்கில் ரேஷன் அரிசி சிக்குவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.