புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் டாஸ்மாக் கடை வேண்டாம் என்று பெண்கள் பல முறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடர் போராட்டத்தை தொடங்கினார்கள். அப்போது பேச்சுவார்த்தைக்கு வந்த டாஸ்மாக் மேலாளர், கலால் அதிகாரி மற்றும் வட்டாட்சியர் மற்றும் காவல் அதிகாரிகளுடன் ஆலங்குடி எம்.எல்.ஏ மெய்யநாதனும் கலந்து கொண்டார்.
பேச்சுவார்த்தையில் டாஸ்மாக் கடைகளை படிப்படியாக அகற்றுவதாக அதிகாரிகள் வாய்மொழியாக ஒத்துக் கொண்டனர். ஆனால் போராட்டக்குழு பெண்கள் பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் ஒத்துக் கொண்டு கடைகள் அகற்றப்படும் என்பதை எழுதிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டனர். அதன்படி சமாதானம் குறித்து எழுதப்பட்ட நிலையில் உடன்படிக்கையில் கையெழுத்து போடாமல் ஒவ்வொரு அதிகாரியாக வெளியேறியதால் போராட்டக்குழு பெண்கள் அதிகாரிகளின் காலைப் பிடித்து கையெழுத்துப் போடும்படி கேட்டனர். ஆனால் அதிகாரிகள் பதில் சொல்லாமல் வெளியேறியதால் ஆத்திரமடைந்த சுமார் 2 ஆயிரம் பெண்களும் திரண்டு வந்து அதிகாரிகளை பேச்சுவார்த்தை நடத்த திருமண மண்டபத்தில் சிறைப்பிடித்தனர்.
தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக சென்ற பெண்கள் 2 டாஸ்டமாக் மதுபானக் கடைகளையும் அடித்து உடைத்தனர். அதன் பிறகு அந்த இரு டாஸ்மாக் கடைகளையும் நிரந்தரமாக மூடுவதாகவும், இனிமேல் கொத்தமங்கலம் ஊராட்சி எல்லைக்குள் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படமாட்டாது என்றும் மாவட்ட ஆட்சியர் கணேஷ் அறிவித்தனர். ஆனால் அதன் பிறகு சில தனிநபர்கள் சட்டவிரோதமாக கொத்தமங்கலம் கடைவீதி உள்ளிட்ட பல பகுதிகளில் மது பாட்டில்கள் விற்பனை செய்து வந்தனர். இதனை தடுக்க வேண்டும் என்று கிராமத்துப் பெண்களும் பொதுமக்களும் பலமுறை புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் ஊராட்சிமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போதும் அதிகாரிகள் சட்டவிரோத மது விற்பனை நடக்காமல் தடுப்பதாக கூறிச் சென்றனர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் தான் இன்று கொத்தமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் உள்ள தியாகி நல்லையா சேர்வை பூங்காவில் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் குடிநீர் குழாய் அருகே சிலர் மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்வதை பார்த்த அந்தப் பகுதியை சேர்ந்த ஜெயசீலன் மற்றும் சில இளைஞர்கள் தட்டி கேட்டதுடன் மது விற்பனை செய்யக் கூடாது என்று மதுப்பாட்டில்களை கைப்பற்றி உடைக்க முயன்றனர். அவர்களுக்கு ஆதரவாக அங்கு நின்றிருந்த பல இளைஞர்களும் மதுபானம் விற்கக் கூடாது என்று தடுத்து உள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த அ.தி.மு.க பிரமுகர்கள் உள்பட பலர் ஜெயசீலன் உள்ளிட்ட இளைஞர்களை கடுமையாக தாக்கி கழுத்தை நெறித்ததுடன் மதுப்பாட்டிலால் தலையில் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவங்கள் அனைத்தும் வீடியோவாக சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
இந்த சம்பவத்தை பார்த்து ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களை அடித்து நொறுக்கியதோடு கொத்தமங்கலத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதை அனுமதிக்க கூடாது என்றும் இளைஞர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கீரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். காவல்துறையினரும் அதிகாரிகளும் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லை என்றால் மீண்டும் பெண்கள், பொதுமக்கள், மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்கின்றனர் இளைஞர்களும், பெண்களும்.