இளைஞர்களின் முயற்சியால் சொந்த செலவில் நீர்நிலைகளை சீரமைக்கும் பணிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் 104 நாட்களாக கிராமத்தில் உள்ள அத்தனை குளங்கள், ஏரிகள், வரத்து வாய்க்கால்கள் அனைத்தையும் சீரமைக்கும் பணியை செய்து வருகிறார்கள் இளைஞர் மன்றத்தினர். இவர்களுக்கு உதவியாக கிராமத்தினரும், பல்வேறு கொடையாளர்களும் துணைய நிற்கின்றனர்.
இவர்களின் பணியை சினிமா பிரபலங்களும், பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் தான் கொத்தமங்கலத்தில் எந்த ஒரு குடும்ப நிகழ்ச்சிக்கும் ஆகும் செலவுகளை குளம் தூர்வார வழங்கி வருகிறார்கள் இளைஞர்கள். கடந்த மாதம் திருமணம் ஆன தம்பதி மணமேடையில் வைத்தே நிதி கொடுத்தார்கள். இந்த நிலையில் இன்று தாமஸ் என்பவரின் குழந்தை துருவனின் முதல் பிறந்த நாளை கொத்தமங்கலம் பெரிய குளத்தில் பொங்கல் வைத்து, மரக்கன்று நட்டு கொண்டாடிய பெற்றோர் குளம் சீரமைப்புக்காக ரூ. 5 ஆயிரத்தை இளைஞர் மன்ற நிர்வாகிகளிடம் வழங்கினார்கள்.
நிதி பெற்ற இளைஞர்கள் குழந்தை துருவன் மற்றும் அவனது பெற்றோரை வாழ்த்தினார்கள். மேலும் இது போல ஒவ்வொரு நிகழ்விற்கும் ஆடம்பரமாக செய்யப்படும் செலவுகளை வருங்காலத்தை எண்ணி நீர்நிலைகளை சீரமைக்க நிதியாக கொடுக்கிறார்கள் கிராம இளைஞர்கள். அவர்களை பாராட்டுகிறோம்.
மேலும் ஒவ்வொரு கிராமத்திலும் இதே போல இளைஞர்கள் செயல்பட்டால் தமிழ்நாட்டில் உள்ள அத்தனை நீர்நிலைகளையும் ஒரே ஆண்டில் சீரமைத்து வறட்சி இல்லாத மாநிலமாக மாற்றிக் காட்டலாம் என்றனர். குழந்தை துருவனின் பிறந்த நாளுக்கு அனைவரும் வாழ்த்துக் கூறிய நிலையில் அதே ஊரைச் சேர்ந்த இளைஞர் வீரமணி.. கஜா புயலில் சாய்ந்த தென்னை மரங்களில் இருந்து செய்யப்பட்ட இருக்கையை குழந்தைக்கு பரிசாக வழங்கி அந்த இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்தார். குழந்தை துருவனுக்கும், நீர்நிலையை உயர்த்த நிதி வழங்கிய அவனது பெற்றோருக்கும் நக்கீரனின் வாழ்த்துக்கள். இளைஞர்கள் முயன்றால் ஒவ்வொரு கிராமமும் வளம் பெறும், விவசாயம் செழிக்கும், குடிதண்ணீர் பழையபடி கிணற்றில் கிடைக்கும்..