![pudukkottai vengaivayal issue](http://image.nakkheeran.in/cdn/farfuture/8t8lpJ6NLGsl_4PD2aH_I0t3QAWNjRxFJbwGFpq9sS8/1673604445/sites/default/files/inline-images/993_12.jpg)
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் கந்தர்வக்கோட்டை தொகுதியில் உள்ள முத்துக்காடு ஊராட்சி வேங்கைவயல் கிராமத்தில் உள்ள பட்டியலின மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த மாதம் டிசம்பர் 25 ஆம் தேதி மர்ம நபர்கள் மனிதக் கழிவுகளை கலந்ததாகக் கண்டறியப்பட்டு பல்வேறு குழுக்கள் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிறப்பு புலனாய்வுக் குழுவினர், பாதிக்கப்பட்டுள்ள பட்டியலின மக்களிடமே விசாரணை செய்து வருவதாகப் பல தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் விசாரணை நேர்மையாகச் செல்கிறது என்று போலீசார் கூறுகின்றனர். மேலும் சிலரது செல்போன்களில் மனிதக் கழிவு கலந்த படங்கள், வீடியோக்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் அந்த செல்போன்களை புலனாய்வு விசாரணை குழுவிடம் ஒப்படைக்க மறுத்து வருவதாகவும் கூறுகின்றனர். இதனால் விசாரணை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சமூகநீதி கண்காணிப்பு குழுவின் உறுப்பினர்கள், முனைவர்கள் சுவாமிநாதன் தேவதாஸ், ராஜேந்திரன் மற்றும் கருணாநிதி, மருத்துவர் சாந்தி ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய துணைக் குழுவினர் இன்று வேங்கைவயல் கிராமத்தில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட குடிநீர் தொட்டியை ஆய்வு செய்து அப்பகுதி பொதுமக்களிடம் விபரங்களைக் கேட்டறிந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும்போது, "பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் விசாரணைக்குழு அதிகாரிகளிடம் விபரங்களைக் கேட்டறிந்தோம். தீவிரமான விசாரணை நடந்து வருகிறது. தகவல்களைத் திரட்டி அதன் அடிப்படையில் விசாரணை நடக்கிறது. மனிதக் கழிவு கலந்தது வன்கொடுமை தீண்டாமையின் வெளிப்பாடாகத்தான் தெரிகிறது. விசாரணை சரியாகத்தான் செல்கிறது. ஒரே பகுதி மக்களை விசாரிப்பதாக கூறுகிறார்களே என்ற கேள்விக்கு., விசாரணை என்பது அப்படித்தான் நடக்கும் அதில் யாரும் தலையிடக்கூடாது. பாதிக்கப்பட்ட மக்கள் தண்ணீரை குடித்து மன உளைச்சலில் இருப்பதாகக் கூறுகிறார்கள். அவர்களுக்கான உதவிகள் வருகிறது. மேலும் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரிடம் பேசிய பிறகு அரசுக்கு அறிக்கை கொடுப்போம் என்றார்கள்.
இதனையடுத்து தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் நேர்மையான விசாரணை வேண்டும். போலி குற்றவாளிகளை உருவாக்கக்கூடாது என்று சிபிஎம், வி.சி.க உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் சமூகநீதி கண்காணிப்பு துணைக் குழுவிடம் மனு கொடுத்துள்ளனர்.