புதுக்கோட்டை மாவட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தொகுதியான விராலிமலையில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றும், மருத்துவர் ஒருவர் சுகாதாரத்துறை அமைச்சர், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர், இணை இயக்குநர், உள்ளிட்ட பலருக்கும் ஒரு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில், விராலிமலை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சக பணியாளர்களை கண்டபடி திட்டுகிறார். பணி செய்ய முடியவில்லை. மன உளைச்சல் தாங்க முடியவில்லை. பல முறை அவர் மீது பல புகார்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. நான் தற்கொலை செய்து கொள்கிறேன். பின்னராவது விசாரணை செய்து நடவடிக்கை எடுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்தும் மேல் அதிகாரி மீது எந்த நடவடிக்கை எடுக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான புகார் அனுப்பிய மருத்துவர் தமிழ்செல்வன், ஒரு முறை தற்கொலைக்கு முயன்று கைகளை கீறிக் கொண்டதாக கூறப்படுகிறது. தற்போதும் அவர் அதே மருத்துவமனையில்தான் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு விராலிமலை மருத்துவமனையில் ஒரு மருத்துவர் செவிலியர்களை கண்டபடி ஒறுமையில் திட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் உள்ள நபர் வேறு யாரும் அல்ல, ஒரு மாதத்திற்கு முன்பு தற்கொலைக்கு முயன்ற தமிழ்செல்வம்தான்.
மேல் அதிகாரிகளிடம் இருக்கும் கோபத்தை, அவர் செவிலியர்களிடம் காட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாவட்ட இணை இயக்குநர் உத்தரவின் பேரில் டாக்டர் ராதிகா 12ஆம் தேதி விராலிமலை மருத்துவமனையில் வீடியோ சம்மந்தமாக விரிவான விசாரணை செய்துள்ளார். இந்த விசாரணையின் அடிப்படையில் யார் மீது தவறு உள்ளது என்று கண்டறிந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.