வங்க கடலில் நிலை கொண்டுள்ள கஜா புயல் கடலூர் - ஸ்ரீஹரிகோட்டோ இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதையடுத்து கஜா புயலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் செய்தியாளர்களிடையே கூறினார்.
மேலும், மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கூறியதாவது: - ’’கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள 683 கிராம பஞ்சாயத்துகள், 16 பேரூராட்சிகள், 5 நகராட்சிகளை கண்காணிக்க 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
40 புயல் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. தேவைப்பட்டால் சமுதாயக் கூடங்கள் நிவாரண முகாம்கள் ஆக மாற்றப்படும். 125 ஜேசிபி, 159 ஜெனரேட்டர், 152 மரம் வெட்டும் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து துறை அதிகாரிகளும் தலைமையகத்தில் இருக்க வேண்டும் யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது.’’