கடலூர் மக்களவை தொகுதி வேட்பாளர் பா.ம.க வேட்பாளர் மருத்துவர் கோவிந்தசாமியையும்,
சிதம்பரம் தொகுதி வேட்பாளர் சந்திரசேகரையும் ஆதரித்து கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்குடி, கருவேப்பிலங்குறிச்சி, முத்தாண்டிகுப்பம், பண்ருட்டி, கடலூர் ஆகிய ஊர்களில் பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
கூட்டங்களில் அவர் பேசுகையில், " மத்திய அரசு தமிழகத்திற்கு வளம் சேர்க்கும் கோதாவரி-காவிரி இணைக்கும் சிறப்பானத்திட்டத்தை உருவாக்கி அதற்கு 65 ஆயிரம் கோடி நிதியும் ஒதுக்கியிருக்கிறது. அதனால் தமிழகம் வளம் பெறும்.
வன்னியர் அறக்கட்டளை தொடர்பாக எங்களை குறை கூறும் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களே... நாங்கள் நீங்கள் கூறும் எத்தகைய விசாரணைக்கும் தயார். அதுபோல் முரசொலி அறக்கட்டளையின் கணக்கு வழக்குகளை எங்களிடம் ஒப்படைப்பீர்களா?
காங்கிரஸ் திமுக கூட்டணி, முரண்பாடான கூட்டணி. தமிழகத்தில் காங்கிரஸ்க்கு ஓட்டு கேட்கும் கம்யூனிஸ்டுகள் கேரளாவில் எதிர்க்கிறார்கள். நீட் தேர்வை கொண்டு வந்ததே தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான். இதில் இரண்டு கட்சிகளும் இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளன.
கல்வி, சுகாதரம், வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பற்றி முதலமைச்சர், பிரதமர் மோடி, மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்ட நாங்கள் அனைவரும் பேசி வருகிறோம். ஆனால் திமுக செயல் தலைவர் தான் ஒரு கட்சி தலைவர் என்ற கூட நினைவு கூட இல்லாமல் கொச்சை வார்த்தைகளால் அவதூறாக பேசி வருவதும், அப்பாவை போல் பிள்ளை என்பது போல் உதயநிதியும் பேசி வருவதும் அறுவறுப்பாக உள்ளது.
வரும் தேர்தலில் அவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். திமுகவில் வேட்பாளராக இருக்க வேண்டும் என்றால் முன்னாள் அமைச்சரின் பிள்ளையாகவோ, பெரிய கோடிஸ்வரானகவோ இருக்க வேண்டும். அதிமுக கூட்டணியில் உள்ள தலைவர்கள் அனைவரும் விவசாயிகள். தி.மு.க. கூட்டணியில் உள்ளவர்கள் பண முதலைகள், சாராய முதலாளிகள் " என்றார்.