ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் திங்கள் கிழமை மக்கள் குறைதீர்ப்பு கூட்டங்கள் நடப்பது வழக்கம். ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு சம்பவம் அங்கு நடந்து விடுகிறது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் 3 குழந்தைகளை தரையில் படுக்க வைத்திருந்த ஒரு தாய், அழும் குழந்தைகளை சமாதானப்படுத்த முடியாமல் கண்ணீரோடு தவித்து வந்தார். இதைப் பார்த்த சிலர் என்னம்மா என்று கேட்க...இந்த குழந்தைகள் 3- ம் ஒரே பிரசவத்தில் பிறந்தது. ஒரு வீடு இல்லை. குழந்தைகளுக்கு பால் வாங்கி கொடுக்க கைல காசும் இல்லை. அதனால தான் கலெக்டர் அம்மாவ பார்த்து உதவி கேட்க வந்தேன் என்றார்.
அந்த பெண்ணை உடனே மாவட்ட ஆட்சியரிடம் அழைத்துச் சென்றார்கள். குளத்தூர் தாலுகா பணிகொண்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள் என்று மதியழகன் தொடங்க அருகில் குழந்தையுடன் நின்ற அவரது மனைவி நாகம்மாள்...அம்மா எங்களுக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் இருக்காங்க. இப்ப 45 நாளைக்கு முன்னால் நடந்த ஒரே பிரசவத்துல ஒரு ஆண், 2 பெண் குழந்தைகள் பிறந்தது. எங்களுக்கு குடியிருக்க நல்ல வீடு கூட இல்லை. நாங்க கூலி வேலை செஞ்சா தான் சாப்பாடு, இப்ப குழந்தைகளை நானும் என் கணவரும் பார்த்துக்கிறவே நேரம் சரியா போகுது. அதனால வேலைக்கு போக முடியல. குழந்தைகளுக்கு பால் வாங்கி கொடுக்க கைல ஒரு ரூபாய் கூட இல்லை. எங்க சாப்பாட்டுக்கும் வழியில்லை என்று கதறி அழுதார்.
இதைக் கேட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, உடனே சமூக நலத்துறை மூலம் பெண் குழந்தைகள் பிறந்தால் கொடுக்கப்படும் நிதியை இப்பவே கொடுங்கள் என்று உத்தரவிட்டவர். உங்க வீடு இருக்கும் இடத்தின் பட்டாவை கொடுங்கள் வீடு கட்டித் தர ஏற்பாடு செய்றேன் என்று சொன்னவர் அதிகாரிகளிடமும் உடனடியாக வீடு கட்ட நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
தாயுள்ளத்தோடு ஆட்சியர் உடனடியாக உதவினாலும் அந்த குழந்தைகளை வளர்க்க அந்த ஏழைத் தாயும், தந்தையும் படும் துயரம் போக்க யாரேனும் உதவி செய்தால் குழந்தைகளை வளர்க்க அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்கிறார்கள் பொதுமக்கள்.