புதுச்சேரி கரையாம்புத்தூர் ஏரிக்கரை ஓரத்தில் குணசுந்தரி(45) என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
தீபாவாளி பண்டிகையையொட்டி பல்வேறு பட்டாசுகள், வெடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு பல தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 11-ஆம் தேதி பிற்பகலில் திடீரென பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டு தொழிற்சாலை வெடித்து சிதறியது. பயங்கர வெடி சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்று தீயை அணைத்து, தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஞானாம்பாள்(44), தீபா(35) ஆகிய இருவரும் தீ விபத்தில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் உரிமையாளர் குணசுந்தரி, ஊழியர்கள் கலாமணி(45), வைத்தீஸ்வரி(27) ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அதில் வைத்தீஸ்வரி அன்றைய தினமே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று முன் தினம் உரிமையாளர் குணசுந்தரி உயிரிழந்தார். இந்நிலையில் கலாமணியும் நேற்று உயிரிழந்துள்ளார்.புதுச்சேரியில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கோர விபத்து குறித்து விசாரித்ததில், தீபாவளிக்கு அதிகமான பட்டாசுகள் தயாரிக்க வேண்டும் என்பதற்காக 300 ரூபாய் சம்பளத்தில் சில பெண்கள் புதிதாக வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அதில் சொர்ணாவூரை சேர்ந்த தீபா ஆலைக்கு அருகிலுள்ள ஏரிக்கரையில் திறந்தவெளியில் மரத்தடியில் வெடி மருந்து மற்றும் உப பொருட்களை சேர்த்து இடிக்கும் போது வெடிமருந்தின் அழுத்தம் காரணாமாக வெப்பம் ஏற்பட்டு வெடித்து சிதறியுள்ளது. அதில் தீபாவின் கை, கால்கள் வெடித்து சிதறியதுடன் அருகிலிருந்த தொழிற்சாலையிலும், குடோனிலும் தீப்பொறிகள் பட்டு அங்கிருந்த வெடி மருந்துகளும், பட்டாசுகளும் வெடித்து சிதறியுள்ளதாக தெரிகிறது. இதில் அங்கிருந்த 4 பெண்களும் தற்போது உயிரிழந்துள்ளனர்.
பல பட்டாசு தொழிற்சாலைகளில் விழா காலங்களில் புதிதாக ஆட்களை வைத்து வேலை வாங்குகின்றனர். ஆனால் அவர்களுக்கு போதிய பயிற்சிகள், பாதுகாப்பு முறைகள் பற்றிய விழிப்புணர்வு இல்லை. வெடி மருந்துகளின் தன்மைகள் என்ன? எவ்வளவு அழுத்தம் கொடுக்க வேண்டும் போன்ற பயிற்சிகளும், அனுபவங்களும் இல்லாததால் இதுபோன்ற விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும், உடலுறுப்புகளின் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே விழாக்காலங்களிலாவது அதிகாரிகள் பட்டாசு தொழிற்சாலைகளில் முன் கூட்டியே ஆய்வுகள் செய்து பாதுகாப்புத்தன்மை மற்றும் பணியாட்களின் திறன் குறித்து பரிசோதித்து வழிகாட்ட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.