ஈரோடு ரெயின்போ கார்டன், ஜீவானந்தம் வீதியைச் சேர்ந்த மக்கள் இன்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது, 'ஈரோடு ரெயின்போ கார்டன் ஜீவானந்தம் வீதியில் நாங்கள் வசித்து வருகிறோம். இங்கு 12 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருப்பு கழிவுநீர், மழை நீர் வடிகால் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வயல்வெளி நீர் இந்த கால்வாய் வழியாகச் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் தற்போது அருகே உள்ள விளை நிலங்கள் பாதிப்புக்குள்ளாகும் எனக் கருதி கழிவுநீர் வாய்க்காலை சுவர் வைத்து அடைத்துவிட்டனர். எனவே குடியிருப்பு கழிவுநீர், மழைநீர், வடிகால் நீர், கிராமங்களின் வயல்வெளி நீர் வேறெங்கும் செல்ல முடியாமல் எங்கள் பகுதியில் தேங்கி நிற்கிறது. இதனால் எங்கள் பகுதியில் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. எனவே தாங்கள் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு கழிவுநீர் செல்லவும், மழைநீர், வயல்வெளி நீர் செல்லவும், சுவர் வைத்து அடைக்கப்பட்ட கழிவுநீர் வாய்க்காலை திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அவர்கள் அதில் கூறியுள்ளனர்.