கடலூர் மாவட்டத்தில் அதிக அளவு பகுதிகளையும், மக்கள் தொகையையும் கொண்ட விருத்தாசலம் சுற்று வட்டாரத்திற்கு உட்பட்ட மங்கலம்பேட்டை, கம்மாபுரம், ஸ்ரீமுஷ்ணம், நெய்வேலி, பெண்ணாடம், திட்டக்குடி, தொழுதூர், மங்களூர், வேப்பூர் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கக் கோரி பல்வேறு தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி விருத்தாசலம் மாவட்ட விழிப்புணர்வு இயக்கம் மற்றும் அனைத்து கட்சி சார்பில் நேற்று கவன ஈர்ப்பு ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருத்தகிரீஸ்வரர் கோவில் நந்தவனத்திலிருந்து தொடங்கிய ஊர்வலத்துக்கு விருத்தாசலம் மாவட்ட விழிப்புணர்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தங்க.தனவேல் தலைமை தாங்கினார். அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பின் கடலூர் மாவட்ட செயலாளர் கார்மாங்குடி வெங்கடேசன், பா.ஜ.க. மாவட்ட விவசாய அணி தலைவர் செந்தில், பா.ம.க. ஒன்றிய கவுன்சிலர் சரவணன், தமிழக வாழ்வுரிமை கட்சி சேகர், நாம் தமிழர் கட்சி கதிர்காமன், வி.சி.க. தென்றல், ம.தி.மு.க ராஜேந்திரன், மக்கள் நீதி மய்யம் வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பல்வேறு அமைப்பைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, வடக்குக் கோட்டை வீதியில் இருந்து, கடைவீதி, பாலக்கரை, கடலூர் ரோடு வழியாக ஊர்வலமாக சென்றனர். அப்போது விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியும், விருத்தாசலத்தில் அரசு மருத்து கல்லூரி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும், கையில் பதாகைகள் ஏந்தி, முழக்கங்கள் எழுப்பி ஊர்வலமாக சென்றனர்.
சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து சார் ஆட்சியர் பிரவீன்குமாரை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தினர்.