கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதில் முன்னெச்சாிக்கை நடவடிக்கையாக மக்கள் கூடுவதையும் கூடும் இடங்களையும் தடை செய்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் அச்சமும், பயமும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குமாி மாவட்ட ஆட்சியா் பிரசாந் வடநேரா மக்களுக்கு வேண்டுக்கோள் விடுத்துள்ளாா்... கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாம் எல்லோரும் ஒன்று சோ்ந்து நிற்க வேண்டும். குமாி மாவட்டத்தில் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை. அண்டை மாநிலமான கேரளாவில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் எல்லை பகுதியில் பலத்த சோதனை மேற்கொள்ளபட்டுள்ளது. இதற்காக 24 மணி நேரமும் செயல்படும் விதமாக கட்டுபாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 1077 என்ற எண்ணில் மக்கள் எப்போதும் தொடா்பு கொள்ளலாம். 31-ம் தேதி வரை எந்த கூட்டங்களும் போராட்டங்களும் நடத்த கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் கோவில்கள் சா்ச்சுகள் பள்ளிவாசல்களில் மக்கள் கூட்டம் கூடாதபடி அறிவுறுத்தப்பட்டுள்ளது. கலெக்டா் மற்றும் அரசு அலுவலகங்களில் மக்கள் கூட்டமாக செல்வதை தவிா்க்க வேண்டும்.
வைரஸ் பாதிப்பு இல்லாததால் மக்கள் மெத்தனமாக இருந்து விடக்கூடாது. காய்ச்சல், சளி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவேண்டும். மேலும் குமாி மாவட்டத்துக்கு தினமும் வரும் 26 ரயில்களும் தினமும் சுத்தம் செய்யப்படுகிறது. அதேபோல் மொத்தமுள்ள 155 கல்லூாிகளில் 139 கல்லூாிகள் மூடபட்டு விட்டன. 1400 அங்கன்வாடி மையங்களும் மூடப்பட்டுள்ளது.
மேலும் 22-ம் தேதி மக்கள் வெளியே செல்வதை தவிா்க்க வேண்டும். இன்னும் 10 நாட்கள் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் ஒரு வாரத்துக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்து கொள்ளுங்கள். அரசு சொல்கின்ற கடைசி நாள் கடைசி நிமிடம் வரை மக்கள் வீடுகளில் இருக்க வேண்டும் என்றாா்.