கரோனாவை தடுக்க ஊரடங்கு அறிவாக்கப்பட்ட போது டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டது. இதனால் கொலை, கொள்ளை, குடும்ப வன்முறை, சாலை விபத்துகள் என அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதனால் பெண்களும் குழந்தைகளும் நிம்மதியாக இருந்தனர். ஆனால் தமிழக அரசு ஏனோ டாஸ்மாக் கடைகளை திறந்து தடுப்பு கம்புகள் கட்டி வட்டம் போட்டு முககவசம் அணிந்து குடை பிடித்துக் கொண்டு ஆதார் அட்டை எடுத்துக் கொண்டு வந்து மது வாங்கி குடிக்க அழைத்தது.
இந்தக் கட்டுப்பாடுகளும் சில நாட்கள் மட்டுமே. அதன் பிறகு டாஸ்மாக் விற்பனை நேரத்தை அதிகரித்து கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொண்டது. இதனால் அத்தனை வன்முறைகளும் விபத்துகளும் நடந்து உயிர்பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. பார்கள் திறக்க அனுமதி இல்லை.
ஆனால் பார் நடத்திய ஆளுங்கட்சி பிரமுகர்கள் கள்ளத்தனமாக மது விற்பனையை தொடர்ந்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் ஆளும் அதிகார வர்க்கத்தின் ஆதரவுடன் பார்கள் நடத்திய மேலநத்தம் மூர்த்தி மன்னார்குடி நகரில் ஆர்.பி.சிவன் நகரில் பெரிய வீடு கட்டிக் கொண்டிருக்கும் நிலையில் அருகில் ஒரு கொட்டகை போட்டு அதில் மது பெட்டிகளை வாங்கி வந்து பல ஊர்களுக்கும் அனுப்பி தடையின்றி விற்பனை செய்து வருகிறார். உள்ளூர் அதிகாரிகள் போனால் மாமூலை கொடுத்து அனுப்பி விடுவது வழக்கம். இப்படியே ஊரடங்கு காலத்திலேயே கோடிக்கணக்கில் மது விற்பனை செய்துவிட்டார்.
இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கில் விற்பனை செய்வதற்காக வழக்கம் போல பெட்டி பெட்டியாக அள்ளி வந்து வைத்திருந்த மது பெட்டிகள் பற்றி உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் பயனில்லை என்பதால் திருவாரூர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் மஞ்சுளாவுக்கு தகவல் கொடுத்துள்ளனர் அப்பகுதி பொதுமக்கள் நள்ளிரவில் வந்த மஞ்சுளா டீம் 12 பெட்டி மது பாட்டில்களை கைப்பற்றியது. எத்தனை முறை மது பெட்டிகளை அள்ளிச் சென்றாலும் ஆள் மட்டும் சிக்குவதில்லை. காரணம் ஆளுங்கட்சியின் பவரானவர் பாதுகாக்கிறாராம்.