தமிழகத்தில் பிரதமரின் கிசான் திட்ட முறைகேடு தொடர்பான விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அந்தந்த மாவட்ட ஆட்சியர்களும் முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் வங்கிக்கணக்கை முடக்கி, பணத்தை மீட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண்மை துறை சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்ட செயலாக்கப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (24/10/2020) நடைபெற்றது. தமிழக வேளாண்துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கூடுதல் இயக்குனர் சங்கரலிங்கம், இணை இயக்குனர் வேலாயுதம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய தமிழக வேளாண்துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, "வேளாண் துறையால் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மக்காச் சோளம் பயிரிடப்பட்டு படைபுழு தாக்கம் அதிகம் உள்ளதால் அவை கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் திட்டம் மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் உணவு தானிய உற்பத்தி சொட்டுநீர் பாசன திட்டம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய வேண்டும். தமிழகத்தில் கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து இதுவரை 123 கோடி ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு லட்சம் பேரிடம் இருந்தும் பணத்தை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது."இவ்வாறு தட்சிணாமூர்த்தி கூறினார்.
தமிழகத்தில் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக, அரசு ஊழியர்கள், அரசு உயர் அதிகாரிகள், இடைத்தரகர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.