2019 டிசம்பரில் தொடங்கிய கரோனா வைரஸ் பரவல், இன்றும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இரண்டாம் அலையாக, உருமாறிய கரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் பல நாடுகள், முழு ஊரடங்கை அமல்படுத்திக்கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. அந்தவகையில் சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரித்துள்ள ‘கோவிஷீல்ட்’ தடுப்பு மருந்துக்கும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்துக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஜனவரி 16 முதல் நாடு முழுவதும் தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் இன்று (16/01/2021) முதற்கட்டமாக 166 மையங்களில் சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 160 மையங்களில் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசியும், 6 மையங்களில் ‘கோவேக்சின்’ தடுப்பூசியும் செலுத்தப்பட உள்ளது.
26 மருத்துவக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள் என தமிழகம் முழுவதும் 37 மாவட்டங்களிலும் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.
மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 6 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒருமணி நேரத்தில் 25 பேர் என்ற அடிப்படையில் ஒரு மையத்தில் ஒரு நாளில் 100 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.
சென்னையில் 4 அரசு மருத்துவக் கல்லூரிகள், ஒரு தனியார் மருத்துவமனை உட்பட 12 மையங்களில் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் இன்று (16/01/2021) தொடங்கி வைக்கிறார். காலை 11 மணி அளவில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.