நக்கீரனில் கடந்த ஏப்ரல் 8 இதழில் வெளியான அதிர்ச்சிகரமான செய்தியின் தொடர்ச்சியாக நடவடிக்கைகள் தொடங்கியிருக்கின்றன.
விருதுநகர் அருப்புக்கோட்டையை சேர்ந்த தேவாங்கர் கலைக்கல்லூரியின் பேராசிரியர் நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் போக்கில் பேசிய ஆடியோ வாட்ஸ்ஆப்பில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பின் கல்லூரி நிர்வாகமானது பேராசிரியர் நிர்மலாதேவியை இடைநீக்கம் செய்தது.
இதை தொடர்ந்து இன்று கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துசெல்லும் வகையில் பேசிய பேராசிரியரை கைது செய்யவேண்டும் என போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து பேராசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விரைவில் கைது செய்யப்பட இருக்கிறார் என ஏடிஎஸ்பி தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் கல்லூரி நிர்வாகத்திற்கும், இதற்கு தொடர்பில்லை எனவும். குற்றம் சுமத்தப்பட்ட பேராசிரியர் விரைவில் கைது செய்யப்படுவார், விசாரணைக்கு பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஏடிஎஸ்பி கூறியுள்ளார்.
மேலும் குற்றம்சுமத்தப்பட்ட பேராசிரியர் வீட்டில் அறையை பூட்டிக்கொண்டு உள்ளே இருப்பதால் அவரின் உறவினர்களின் உதவியுடன் வீட்டை திறந்து அவரை கைது செய்யப்போவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.