![private schools chennai high court tamilnadu government](http://image.nakkheeran.in/cdn/farfuture/wDor9TH3oxZHZM8nkipnif1V8aRI6KPKMzhO3-Vb1i0/1600863031/sites/default/files/inline-images/CHENNAI%20HIGH%20COURT%202_14.jpg)
உயர்நீதிமன்ற உத்தரவை மீறி 100% கட்டணம் வசூலித்த 9 தனியார் பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, பதிவு செய்யப்பட்டது.
தமிழகத்தில் கரோனா அச்சம் காரணமாக பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இருப்பினும் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகளை எடுத்து வரும் நிலையில், சில பள்ளிகள் பெற்றோர்களிடம் 100% கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு இன்று மீண்டும் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அதில் 111 புகார்களில் 97 நிரூபிக்கப்படவில்லை; 9 பள்ளிகள் முழுக் கட்டணத்தைச் செலுத்த நிர்பந்திப்பதாகத் தெரிவித்தது.
இதையடுத்து, 100% கட்டணம் செலுத்தும்படி பெற்றோரை நிர்பந்தித்த 9 பள்ளிகள் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி பதிவு செய்தார். அதைத் தொடர்ந்து, பள்ளிக் கட்டணத்தில் முதல் தவணையான 40% கட்டணம் செலுத்த செப்டம்பர் 30- ஆம் தேதிக்கு மேல் அவகாசம் நீட்டிப்பு இல்லை எனக் கூறிய நீதிபதி, அவமதிப்பு வழக்கில் 9 பள்ளிகளும் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 14- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது பற்றி புகாரளிக்க இ- மெயிலை உருவாக்கி, அதை விளம்பரப்படுத்தவும் ஆணையிட்டுள்ளார்.