பணப் பரிவர்த்தனை செயலிகளின் சேவை எண்கள் என போலியான எண்களை பதிவிட்டு அதன் மூலம் பல லட்சத்தை சுருட்டிய மோசடி கும்பல் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒருகாலத்தில் போஸ்ட் ஆபீஸில் மணியார்டரில் பணம் அனுப்பிய காலம் போய் தற்போது கூகுள் பே, போன் பே போன்ற செயலிகள் மூலம் உடனுக்குடன் நினைத்த நேரத்தில் பணத்தை பரிவர்த்தனை செய்வதற்கான செல்போன் செயலிகள் அதிகரித்து வருகின்றன. மொபைல் மூலம் பணம் பரிவர்த்தனை செய்வது மக்களுக்கு சிரமம் இல்லாமல் வசதியாக இருக்கிறது என்பது ஒருபுறம் இருந்தாலும் இதுபோன்ற தொழில்நுட்பங்கள் மூலமாகவும் மோசடிகள் நடைபெறுகிறது என்பதும் அதிர்ச்சியான உண்மை.
கூகுள் பே, பேடிஎம், போன் பே என பல்வேறு பெயர்களில் தனியார் பணப்பரிவர்த்தனை செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. டீக்கடை முதல் துணிக்கடை வரை இது போன்ற செயலிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த செயலிகளில் தங்களது சேவை மைய எண் என போலியான எண்களை மோசடி கும்பல் பதிவு செய்து வாடிக்கையாளர்களிடம் பணத்தை சுருட்டும் செயலில் தற்போது இறங்கியுள்ளது அம்பலமாகியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பள்ளி ஆசிரியையான பௌலின் என்பவர் அவருடைய செல்போனில் கூகுள் பே செயலியில் ஆயிரம் ரூபாயை பரிவர்த்தனை செய்துள்ளார். ஆனால் அந்தப் பணம் அனுப்பப்பட்ட நபருக்கு சென்று சேரவில்லை என்பதால் அந்த செயலியில் குறிப்பிடப்பட்டிருந்த சேவை மைய எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார். கூகுளில் கிடைத்த அந்த போலியான எண்ணை அதிகாரபூர்வ சேவை என கருதி தொடர்பு கொண்டபோது எதிர்முனையில் சேவை மைய ஊழியர் போல் பேசிய மோசடி நபர் பௌவுலின் செயலியை பதிவு செய்து வைத்துள்ள செல்போன் எண்ணை மட்டும் வாங்கி அதை அந்த மோசடி நபரின் கூகுள் பே செயலியில் பதிவிட்டு அதன் மூலம் அவரது வங்கி கணக்கு விவரங்களை எடுத்துள்ளார்.
அப்படி அனைத்து விவரங்களையும் எடுத்த பிறகு தற்போது தங்கள் செல்போனுக்கு வரும் ஓடிபி எண்ணை கூறினால் கணக்கில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை திருப்பி செலுத்தப்படும் என கூறியுள்ளார். இதன்பின் ஒடிபி நம்பரையும் கொடுத்துள்ளார் பௌவுலின். அதனையடுத்து பௌவுலின் வங்கி கணக்கில் இருந்து அடுத்தடுத்து சிறு சிறு தொகையாக 50,000 ரூபாய் திருடி உள்ளது அந்த மோசடி கும்பல்.
இதே பாணியில் பல்வேறு பரிவர்த்தனை செயலிகளின் பெயரில் போலி சேவை எண்ணை கொடுத்து லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளனர் என்கின்றனர் வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீசார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள வங்கி மோசடி தடுப்பு பிரிவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக இது போன்று பத்து புகார்கள் வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் கூகுளில் பதிவாகியுள்ள இதுபோன்ற போலி சேவை எண்களை நீக்குவதற்கான அனுமதியை காவல்துறையினருக்கு வழங்காததால் போலி எண்கள் நீக்கப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வாடிக்கையாளர்கள் உண்மையான சேவை மையங்கள் என நம்பி தொடர்நது இந்த மோசடிக் கும்பல்களால் ஏமாந்து வருவது தெரியவந்துள்ளது.
அதேபோல் வாடிக்கையாளர்கள் சேவை பற்றி விளக்கங்களை கேட்க கொடுக்கப்பட்ட எண்கள் 10 இலக்க எண்களாக இருந்தால் அவற்றை தொடர்பு கொள்ளக் கூடாது என எச்சரிக்கும் போலீசார். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களின் சேவை எண் போலியாக இருப்பதை கவனித்தால் அதை நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.