தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்ற உடனே முதன்முதலில் ஐந்து திட்டங்களுக்கு கையெழுத்திட்டார். அதில் கரோனா காலம் என்பதால் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்கள் கரோனா சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்தார். ஆனால், முதல்வரின் அறிவிப்பு வெறும் பெயரளவில்தான் இருக்கிறதே தவிர செயல்பாடு என்பது கேள்விக்குறியாகத்தான் இருந்துவருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை தினசரி 500க்கும் மேற்பட்ட பொது மக்கள் கரோனாவிற்கு ஆளாகிவருகிறார்கள். இவர்கள் திண்டுக்கல் பழனி ஒட்டன்சத்திரம் உட்பட சில அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். இருந்தாலும் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்குத்தான் பெரும்பாலான கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் சிகிச்சைக்காக படையெடுக்கிறார்கள்.
இப்படி வரக்கூடிய நோயாளிகளுக்குப் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால், வார்டுகளில் கீழேயும் வார்டுகளுக்கு வெளியேயும் நோயாளிகள் சிகிச்சை பெற்றுக்கொள்ளக் கூடிய அவலநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அப்படி இருந்தும் கரோனா தொற்று தீவிரத்தால் தினசரி 20க்கும் மேற்பட்ட பொது மக்கள் கரோனாவுக்குப் பலியாகி வருகிறார்கள். அப்படி இருந்தும் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டம் மூலம் தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை பெற மக்கள் ஆர்வம் காட்டாமல் அரசு மருத்துவமனைக்குத்தான் தினசரி கரோனா நோயாளிகள் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள். இது சம்பந்தமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கரோனா நோயாளிகள் சிலரிடம் கேட்டபோது, “இந்தக் கரோனாவிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக முதல்வர் ஸ்டாலின் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்” என்று அறிவித்தார்.
அதன்படி காப்பீட்டு திட்டம் மூலம் பயன்பெறும் திண்டுக்கல்லில் உள்ள பல தனியார் மருத்துவமனைகளில் போய் கேட்டால், “எங்கள் மருத்துவமனை காப்பீட்டு திட்டத்தில் இல்லை ஒருநாள் சிகிச்சை பெற வேண்டும் என்றால் 3 லட்சம் முதல் 4 லட்சம் ஆகும். முதலில் இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் அட்மிஷனை போடுவோம் அதுவும் தற்போது மருத்துவமனையில் இடமில்லை. ஒருநாள், ரெண்டு நாள் ஆகும். டோக்கன் அட்வான்ஸ் கொடுத்துட்டுப் போங்க அதுக்கப்புறம் வந்து சேர்ந்துகொள்ளலாம்” என்று கூறுகிறார்கள். அந்த அளவுக்கு எங்களிடம் பணம் வசதி இல்லை அதனாலதான் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறோம். ஆனால் பலர் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் கடனை உடனை வாங்கி அந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்களே தவிர முதல்வர் உத்தரவை எல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு தனியார் மருத்துவமனைகளில் உள்ள டாக்டர்கள் பலர் வருமானம் பார்ப்பதிலையே குறிக்கோளாக இருந்துவருகிறார்கள். அதனால்தான் பல அப்பாவி மக்களின் உயிர் உறவினர்கள் கண் முன்னே பறிபோகிறது என்று வருத்தத்துடன் கூறினார்கள்.
இதுபற்றி மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் கேட்டபோது, “இது சம்பந்தமாக ஜெ.டி.யிடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்கச் சொல்லி காப்பீட்டு திட்டம் மூலம் பயன்படும் தனியார் மருத்துவமனைகளையும் ஆய்வு செய்ய சொல்கிறேன்” என்று கூறினார். இது சம்பந்தமாக அரசு தலைமை மருத்துவமனையின் இணை இயக்குநரான (JD) சிவக்குமாரிடம் கேட்டபோது, “கலெக்டர் சொன்னதின் பேரில் மாவட்டத்தில் உள்ள 22 தனியார் மருத்துவமனைகளுக்கும் வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பி உள்ளேன். அதன்படி முறையாக முதலமைச்சரின் காப்பீட்டு திட்டம் மூலம் பொதுமக்களுக்கு கரோனா சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறோம். ஆனால் நாங்கள் சொல்வதை எங்க தனியார் மருத்துவமனைகளின் டாக்டர்கள் கேட்கிறார்கள், பின்பு முதலமைச்சரின் காப்பீட்டு திட்டம் மூலம் கரோனா சிகிச்சை பெற வேண்டும் என்று பொதுமக்கள் போனாலே இடமில்லை என்று கூறிவிடுவார்கள். எரிகிற வீட்டில் எண்ணெய்யை ஊற்றுவதுபோல்தான் செயல்படுகிறார்கள்” என்று கூறினார்.