வங்கி கடனை வசூலிப்பதற்காக விவசாயி ஒருவரிடம் தனியார் நிதி நிறுவன பெண் ஒருவர் தரக்குறைவாக பேசும் செல்ஃபோன் ஆடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் ஏனாதிமங்கலத்தை சேர்ந்தவர் விவசாயி ரகோத்தமன். இவர் இந்தியன் வங்கியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு 30 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். அதனை விவசாயி ரகோத்தமன் கட்டத்தவறியதாகக் கூறப்படுகிறது. அந்த கடன் தொகையை வசூலிக்க நியமிக்கப்பட்ட தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்த பெண் ஊழியர் ஒருவர் ரகோத்தமனை ஃபோனில் தொடர்புகொண்டு கடன்குறித்து கேட்டுள்ளார்.
இதுகுறித்த ஆடியோவில்...
பெண் ஊழியர்: கெளம்பி வாங்க... பேங்குக்கு வாங்க... இந்த ரூல்ஸ் எல்லாம் பேங்க்ல வந்து பேசுங்க...
விவசாயி ரகோத்தமன்: நீ ஏம்மா கால் பன்ற... நீ வைம்மா..
பெண் ஊழியர்: யோவ் நான்தான்யா கால் பண்ணனும்... பேங்குக்கு கெளம்பி வா... இந்த லா எல்லாம் பேசாதே... நீ தான லோன் வாங்குனா... லோன வாங்கிட்டு நீபாட்டுக்கு ரிலைன்ஸ்ல இருந்து எதுக்கு பேசறாங்கனு கேக்கற...
விவசாயி ரகோத்தமன்: யோவ்ன்னுல்லாம் சொன்னா நாளைக்கு பேங்க்கு முன்ன ரோட்ல படுத்துப்பேன்... ஏமாத்திட்டு வெளிநாட்டுக்கு போனவன என்ன செஞ்சீங்க...
பெண் ஊழியர்: அவன் கதையெல்லாம் உனக்கு வேணாம்... உன் கதையை மட்டும் நீ பாரு... அவரு கடனை கட்டிட்டாரு தெரியுமா?
விவசாயி ரகோத்தமன்: எந்த கடனை கட்டிவிட்டாரு?
பெண் ஊழியர்: ஊரு கதைய பேசுறத நிறுத்துங்க.. அவன் சாப்பிட்டாதான் சாப்பிடுவீங்களா? அவன் செத்துட்டா நீங்களும் செத்திருவீங்களா?
விவசாயி ரகோத்தமன்: உங்ககிட்ட கடன் வாங்கிட்டா எங்கள சாவ சொல்லுறிங்களா?
பெண் ஊழியர்: செத்தா கூட சாவுங்க... கடன கட்டிட்டு சாவுங்க...
இவ்வாறு நீளுகிறது இந்த உரையாடல்.
மேலும் இது குறித்து ஆட்சியரிடம் புகாரளிப்பதாக விவசாயி தெரிவிக்க, புகார் பண்ணிக்கோங்க என் பெயர் அஸ்வினி எனவும் தெரிவித்துள்ளார். இப்படி மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் பேசிய அந்த தனியார் பெண் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்துள்ளார் ரகோத்தமன். இந்நிலையில் திருவெண்ணைநல்லூர் இந்திய வங்கி கிளையை தொடர்புகொண்ட மாவட்ட ஆட்சியர் அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.