பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் "வேண்டாம் ஹட்ரோகார்பன் திட்டம் கலந்துரையாடல்" கூட்டம் புதுச்சேரியில் இன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு பூவுலகின் நண்பர்கள் தமிழ்நாடு - புதுச்சேரி அமைப்பாளர் சீனு.தமிழ்மணி தலைமைத் தாங்கினார். மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் சிறப்புரை ஆற்றினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநிலச் செயலர் ப.அமுதவன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், திராவிடர் விடுதலைக் கழகம் தலைவர் லோகு.அய்யப்பன், திராவிடர் கழகம் தலைவர் சிவ.வீரமணி, மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் கோ.அ.ஜெகன்நாதன், தமிழர் களம் செயலாளர் கோ.அழகர், புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர் கூட்டமைப்பு தலைவர் சீ.சு.சாமிநாதன், மீனவர் விடுதலை வேங்கைகள், தமிழ்த் தேசிய பேரியக்கம், இலக்கிய பொழில் இலக்கிய மன்றம், புதுவை தன்னுரிமைக் கழகம், இராவணன் பகுத்தறிவு இயக்கம், பீபில்ஸ் பல்ஸ், புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகம், நெகிழி ஒழிப்பு இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தொடங்கி இராமநாதபுரம் மாவட்டம் வரையில் உள்ள காவிரி படுகையில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களைச் செயல்படுத்துவதைக் மத்திய அரசு கைவிட வேண்டம், காவிரி படுகை முழுவதையும் வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும், மீறி செயல்படுத்த முனைந்தால் புதுச்சேரியில் உள்ள கட்சிகள், அமைப்புகளை ஒருங்கிணைத்து மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற நாசகர திட்டங்களை எதிர்த்து தொடர்ந்துப் போராடுவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.