கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் இன்று (19.01.2024) முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை சென்னை, கோயம்புத்தூர், மதுரை திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இதில், 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் நடத்தப்படும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியில் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து சுமார் 5500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள், 1600க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள், 1000க்கும் மேற்பட்ட நடுவர்கள் மற்றும் 1200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர்.
இதனையொட்டி சென்னை நேரு வெளிப்புற விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி ‘கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு’ போட்டியை இன்று மாலை 06.50 மணியளவில் தொடங்கி வைத்தார். பின்னர் ‘வணக்கம் சென்னை’ என தனது உரையைத் தொடங்கி பிரதமர் மோடி பேசி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், மத்திய இணையமைச்சர் எல். முருகன், தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக கேலோ இந்தியா போட்டி தொடக்க விழாவில் பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வீரமங்கை சிலையை நினைவுப் பரிசாக வழங்கினார். இதனையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி ஆவலோடு கண்டு களித்தது குறிப்பிடத்தக்கது.