கன்னியாகுமரி மாவட்டம், மூலச்சல் பகுதியைச் சோ்ந்தவா் ஜார்ஜ் பொன்னையா ஜனநாயக கிறிஸ்தவ பேரவையின் தலைவராகவும் குழித்துறை கத்தோலிக்க மறைமாவட்ட பாதிரியாராகவும் உள்ளார். கடந்த ஜூலை 18- ஆம் தேதி காவல்துறை அனுமதியில்லாமல் அருமனையில் நடந்த ஒரு கிறிஸ்தவ அமைப்பின் கூட்டத்தில் பாரத மாதா குறித்தும், பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தோ்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது குறித்தும், அமைச்சா் சேகா்பாபு குறித்தும், கொச்சைப்படுத்தும் விதமாக சர்ச்சைக்குரிய கருத்துகளை ஜார்ஜ் பொன்னையா பேசினார்.
இது பா.ஜ.க, இந்து முன்னணி உள்ளிட்ட இந்து இயக்கங்கள் மற்றும் இந்துக்கள் மனதைப் புண்படும் விதமாக இருந்தது. இதனால் ஜார்ஜ் பொன்னையா மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் கொடுக்கபட்டது. இந்த நிலையில் அருமனை காவல் நிலையத்தில் ஜார்ஜ் பொன்னையா மீது 7 பிாிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தலைமறைவான ஜார்ஜ் பொன்னையாவை பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கபட்டன. இந்த நிலையில் மதுரை கள்ளிக்குடியில் வைத்து அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் தற்போது இந்த வழக்கில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசிய போராட்டத்தை ஒருங்கிணைத்த ஸ்டீபனை போலீசார் கைது செய்துள்ளனர்.