நாளை ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி கொண்டாடப்படுவதை முன்னிட்டு கோயம்பேடு மலர் சந்தையில் பூக்களின் வரத்து அதிகரித்துள்ளதன் காரணமாக பூக்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது.
கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக விளைச்சல் அதிகரித்திருந்தது. பூக்களின் விளைச்சல் அதிகரித்துள்ளதால் தற்போது பூக்களின் விலை குறைந்துள்ளதாக கோயம்பேட்டில் உள்ள மலர் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மல்லிகைப் பூவை தவிர மற்ற பூக்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது.
மல்லிகை பூவானது கிலோவிற்கு 600 ரூபாய்க்கும், சம்மங்கி பூவானது கிலோ ஒன்றுக்கு 300 ரூபாயாகவும், ரோஜாப்பூ கிலோவிற்கு 120 முதல் 140 ரூபாய்க்கும், சாமந்திப்பூ கிலோ ஒன்றிற்கு 100 ரூபாய்க்கும், ஜாதிமல்லி கிலோ ஒன்றிற்கு 100 ரூபாய்க்கும் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து இதே நிலையில் பூக்களின் விலை நீடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் மலர் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கணிசமாக பூக்கள் விலை குறைந்ததால் கோயம்பேடு மலர் சந்தைக்கு மக்கள் அதிகமான அளவில் ஏராளமாக வந்து ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நிகழ்வுகளுக்காக பூக்களை வாங்கி செல்கின்றனர்.