நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான ரூபி மனோகரனை ஆதரித்து காங்கிரசின் அகில இந்திய செய்தி தொடர்பாளரான குஷ்பு, ரெட்டியார்பட்டி முன்னீர்பள்ளம் திடியூர் உள்ளிட்ட பல இடங்களில் பிரச்சாரம் செய்தார்.
இரவு களக்காடு நகரின் பிரச்சாரத்தின் போது பேசிய குஷ்பு, "இந்தத் தொகுதி காமராஜரின் காலம் முதல் காங்கிரசின் தொகுதியாகவே இருந்து வருகிறது. இங்கு எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் செய்த பணிகள் பற்றி உங்களுக்குத் தெரிந்தது தான். அந்த நற்பணிகள் தொடர ரூபி மனோகரனுக்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள். இங்கு பஸ் வசதி இல்லை என்று ஒரு கிராமத்தில் மக்கள் என்னிடம் கூறினார்கள். ரூபி மனோகரனை வெற்றி பெறச் செய்தால் அவர் பஸ் வசதி செய்து தருவார். அப்போது நானும் வருவேன் என்றேன்.
தற்போதைய அ.தி.மு.க.வின் எட்டு ஆண்டு கால ஆட்சியில் ஒரு நல்ல திட்டங்கள் கூடக் கொண்டு வரப்படவில்லை. ஏதாவது ஒரு திட்டம் கொண்டு வந்தேன் என்று அவர்களால் சொல்ல முடியுமா? முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற வில்லை. மக்களுக்கு நல்லது செய்ய ஒரு மனது வேண்டும். அந்த மனது தி.மு.க.விடம் உள்ளது. இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத் திட்டங்களைக் காமராஜர் கொண்டு வந்தார். அதன் பின் அவரது வழியில் தி.மு.க.வினர் ஆட்சி செய்தனர்" என்று பேசினார்.
பிரச்சாரத்தின் போது கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் திரண்டிருந்தனர்.