கடந்த பிப்ரவரி 2-ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டு கடைகள் உள்ளிட்ட ஏராளமானவை எரிந்து சாம்பல் ஆயின . அதன் பிறகு கடைகளை அகற்ற முடிவெடுத்தனர். கோவிலில் உள்ள வீரவசந்தராய மண்டபத்தில், தீ விபத்து ஏற்பட்டு அந்த மண்டபத்தின் மேற்கூரை மற்றும் பசுபதீஸ்வரர் சன்னதியின் மேற்கூரைகள் இடிந்து விழுந்தன. அதோடு, கோயிலுக்குள் இருந்த 36 கடைகள் எரிந்து சாம்பலாகின.
மேலும் கோயில்களுக்குள் வைக்கப்பட்டுள்ள கடைகள் தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, கோயிலுக்குள் இருக்கும் கடைகளை உடனே அகற்ற உத்தரவிட்டது. அதனையடுத்து, விபத்து நடந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மண்டபத்தில் இருந்த கடைகள் அகற்றப்பட்டன. தொடந்து அதற்கான பணிகள் தொடர்கின்றன.
இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஶ்ரீரங்கம், சமயபுரம், திருப்பட்டூர், மலைக்கோட்டை உள்ளிட்ட முக்கியக் கோயில்களில் விதிகளை மீறி கடைகள் உள்ளன. இதற்கிடையே மதுரையில் நடந்ததுபோல் அசம்பாவிதம் வேறு எந்தக் கோயிலிலும் நடந்துவிடாமல் இருக்க வேண்டும் என திருச்சி ஶ்ரீரங்கம், மலைக்கோட்டை, திருப்பட்டூர் உள்ளிட்ட பிரபல கோயில்களில் உள்ள கடைகளை அகற்ற அறநிலையத்துறை கெடு விதித்தது.
ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலின் 21 கோபுரங்கள், பதினாறு கால் மண்டபம் மற்றும் நான்கு கால் மண்டபம் உள்ளிட்டப் பகுதிகளில் 52 கடைகள் உள்ளது. இதில் 14 கடைகளின் உரிமையாளர்களுக்குக் கடந்த சில தினங்களுக்கு முன்பு, “ஓரிரு தினங்களுக்குள் கடைகள் அகற்றிட வேண்டும். இல்லாவிட்டால் அறநிலையத்துறையே கடைகளை அகற்றும்” என இந்து அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியது.
இந்த கடைகளை அகற்றும் பணியில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் வி.ஏ.ஓ. ஆறுமுகம், நில கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன், எழுத்தர் சுரேஷ், ஊழியர் சந்திரகாஷன் ஆகியோர் இன்று சீல் வைத்தனர்.
இதேபோல் மலைக்கோட்டையில் உள்ள 50 கடை உரிமையாளர்களுக்கும், சமயபுரத்தை அடுத்த திருப்பட்டூர் பிரம்மாகோயிலில் உள்ள கடைகளின் உரிமையாளர்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது.