Skip to main content

கோரிக்கை வைத்த செல்வப்பெருந்தகை; ஏற்றுக்கொண்ட தமிழக அரசு!

Published on 10/03/2025 | Edited on 10/03/2025

 

TN govt accepted it selvaperunthagai made the request 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் புதிய கட்டப்பட்டுள்ள மார்க்கெட் கட்டடத்திற்கு ஏற்கனவே இருந்த காமராஜர் பெயரை நீக்கிவிட்டு கலைஞர் பெயர் சூட்டப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இதனையடுத்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை  எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “திருத்தணியில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வருகிற பெருந்தலைவர் காமராஜர் பெயரில் உள்ள சந்தையை, கலைஞர் காய்கறி அங்காடி எனப் பெயரை மாற்றத் திருத்தணி நகராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.

ஏற்கனவே பெருந்தலைவர் காமராஜர் பெயரில் இருப்பதை மாற்ற வேண்டாமென தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலினைக் கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில், இந்த பெயர் மாற்றத்தினால் இதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குவதைத் தவிர்க்கும் வகையில், இக்கோரிக்கையை முதலமைச்சர் கனிவுடன் பரிசீலிக்க வேண்டுமெனத் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் திருத்தணி நகராட்சியில் ரூ.3.02 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய மார்க்கெட் கட்டடத்திற்கு "பெருந்தலைவர் காமராசர் நாளங்காடி" எனப் பெயரிடப்படும் எனத் தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளதாக நகராட்சி நிர்வாக இயக்குநர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சி ம.பொ.சி சாலையில் நகராட்சிக்கு சொந்தமாக காமராஜர் நாளங்காடி அமைந்துள்ளது. இந்த நாளங்காடி 81 கடைகளுடன் கடந்த 35 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. பழைய மார்க்கெட் தற்போதைய மக்கள் தொகைக்கு போதுமானதாக இல்லாததாலும், சிதிலமடைந்தும் மோசமான நிலையில் இருந்தது. இதன் காரணமாக பழைய கட்டிடத்தினை இடித்து, அப்புறப்படுத்தி 97 கடைகளுடன் புதியதாக நாளங்காடி கட்ட முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.3.02 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, கட்டப்படும் நாளங்காடியின் அனைத்து பணிகளும் முடிவடையும் தறுவாயில் உள்ளன. புதியதாகக் கட்டப்பட்டுள்ள நாளங்காடிக்குப் பெருந்தலைவர் காமராஜர் நாளங்காடி" என்று பெயரிடத் தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்