Skip to main content

குழந்தைக்காக மாமியார் செய்த செயல்; 18 வருடம் போராடிய மருமகன் - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்:93

Published on 09/01/2025 | Edited on 09/01/2025
thilagavathi ips rtd thadayam 93

தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தடயம் என்ற தொடரின் வழியே பல்வேறு வழக்குகளை விளக்கி வருகிறார். அந்த வகையில் பிரபலமான வழக்கு ஒன்றை விளக்குகிறார்.

பிரபல கிரைம் ஷோ தொகுப்பாளர் சுஹைப் இல்யாசியின் மனைவி அஞ்சு இல்யாசி இறப்பில் சந்தேகம் இருக்கிறதா? என உயிரிழந்த அஞ்சு இல்யாசியின் அப்பா, தம்பி, தங்கையிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரனை நடத்தினர். அஞ்சு இல்யாசியின் அம்மா மற்றும் அக்கா ஆகியோர் கனடாவில் வசித்து வந்ததால் இந்தியாவில் இருக்கும் அஞ்சு இல்யாசியின் உறவினர்களிடம் மட்டும் விசாரித்துவிட்டு மருத்துவர்கள் கொடுத்த சான்றிதழை வைத்து அஞ்சு இல்யாசி தற்கொலை செய்திருப்பதாக வழக்கை முடித்துவைத்தவரை முந்தைய தொடரில் தொடரில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாகப் பின்வருமாறு...

சம்பவம் நடந்த சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் காவல்துறையினர் சுஹைப் இல்யாசியிடம் வந்து, உங்களுடைய மனைவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அஞ்சு இல்யாசின் அம்மாவும் அக்காவும் கனடாவில் இருந்து இந்தியா வந்து புகார் கொடுத்துள்ளதாகக் கூறி சுஹைப் இல்யாசியை கைது செய்துள்ளனர். அஞ்சு இல்யாசி அம்மா அளித்த புகாரில் தன்னுடைய மகள் அப்படி கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்யும் அளவிற்கு கோழை இல்லை என்றும் சுஹைப் இல்யாசிதான் தன் மகளைக் கொலை செய்தார் என குற்றம் சாட்டியிருக்கிறார். அதோடு தன்னுடைய பேத்தி இப்படிப்பட்ட கொலைகாரரிடம் இருப்பது பிடிக்கவில்லை என்று குழந்தையைக் கேட்டு காவல் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் சுஹைப் இல்யாசி மீது வரதட்சனை, வன்கொடுமை, கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து வழக்குப்பதிவு தொடர்ந்துள்ளார்.

அஞ்சு இல்யாசி அம்மா தொடர்ந்த வழக்கில் பெரிய வழக்கறிஞரை வைத்து நீதிமன்றத்தில் வாதாடி சுஹைப் இல்யாசிக்கு சிறை தண்டனை வாங்கி கொடுக்கிறார். அதன் பின்பு சில மாதங்கள் கழித்து சுஹைப் இல்யாசிக்கு பெயில் கிடைக்க வெளியே வந்ததும் அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் பெயில் கிடைக்கக் கூடாது என மீண்டும் வழக்குப்பதிவு செய்து சுஹைப் இல்யாசிக்கு ஆயுள் தண்டனை வாங்கி கொடுத்துள்ளார். அதன் பின்பு சுஹைப் இல்யாசி ஒருபக்கம் வெளியில் இருக்கும் தன்னுடைய குழந்தையைப் பார்த்துக்கொண்டு சிறையில் இருந்தே தனக்கான வழக்கறிஞரை வைத்து ஆயுள் தண்டனைக்கு எதிராக நீதிமன்றத்தில் போரடி ஒரு பெயில் வாங்கி வெளியில் வந்துள்ளார். இதற்கிடையில் சுஹைப் இல்யாசியின் பெற்றோர் சுமயா கான் என்ற பெண்ணுடன் அவருக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். மனைவியின் உடல் நிலையைக் காரணமாகச் சொல்லி சுஹைப் இல்யாசி நீதிமன்றத்தில் நான்கு மாதங்கள் பரோல் கேட்டு பெற்றுக்கொள்கிறார். அதன் பின்பு அவர் வெளியில் இருக்கும்போதே மீண்டும் பரோலை நீட்டிக்கச் சொல்லி நீதிமன்றத்தை அணுகியுள்ளார். ஆனால் நீதிமன்றம் பரோலுக்கு மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில் அஞ்சு இல்யாசி அம்மா வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்றக் கோரி நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார். இதுபோல தொடர்ந்து சுஹைப் இல்யாசிக்கு பிரச்சனை தருவது அஞ்சு இல்யாசி அப்பாவுக்கு பிடிக்காததால், தன்னுடைய மனைவி மற்றும் அஞ்சு அக்காவைப் பிரிந்து தனியாக வந்துள்ளார். இப்படி ஒரு கருத்து முரண் அஞ்சு இல்யாசி வீட்டில் நடந்து வர. அஞ்சு இல்யாசி மெடிக்கல் ரிப்போர்ட்டை பார்த்த புதிய மெடிக்கல் போர்டு டீம், அஞ்சு தன்னை முதலில் குத்தியபோதே இரத்தப்போக்கு காரணமாக மயக்கம் அடைந்திருக்கக் கூடும். ஆனால் எப்படி மீண்டும் ஆழமாக இரண்டாவது முறை குத்திக்கொள்ள முடிந்தது என்ற சந்தேகத்துடனான ஸ்டேட்மென்டை கொடுத்துவிடுகின்றனர். அந்த ஸ்டேட்மென்ட்க்கு பிறகு இந்த வழக்கு சுஹைப் இல்யாசிக்கு எதிராக திரும்ப ஆரம்பித்தது.

குழந்தையின் கஸ்டடியை பெற நினைத்துத்தான் அஞ்சு இல்யாசி அம்மாவும் அக்காவும் தனக்கு இந்தளவிற்கு பிரச்சனை தருகின்றனர் என்பதை சுஹைப் இல்யாசி புரிந்துகொண்டு, என்ன ஆனாலும் குழந்தை தன்னுடன்தான் இருக்க வேண்டும் என தன்மீதுள்ள வழக்குகளை எண்ணிக் கலங்காமல் போராடி வந்துள்ளார். இதற்கிடையில் நீதிமன்றம் ஒரு நாள் மட்டும் குழந்தையைப் பராமரிக்க அஞ்சு இல்யாசி அம்மாவுக்கு உத்தரவிடுகிறது. அந்த ஒரு நாள் அஞ்சு இல்யாசி நினைவு நாளாக இருக்க வேண்டும் அவரது அம்மா கோரிக்கை வைத்து அனுமதி பெற்றுக்கொள்கிறார். ஆனால், குழந்தையின் முழுமையான கார்டியன் பொறுப்பை சுஹைப் இல்யாசிக்கு கொடுத்து அவர்தான் இயற்கையான கார்டியன் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

குழந்தையை தங்களிடம் வைத்துக்கொள்ள நினைத்து தொடர்ந்து வழக்கு மேல் வழக்குப் போட்டு சுஹைப் இல்யாசிக்கு அஞ்சு இல்யாசி அம்மா பிரச்சனை கொடுத்து வர, ஏற்கனவே இருந்த தரவுகள் அடிப்படையில் சுஹைப் இல்யாசி வாழ்நாள் முழுக்க சிறை தண்டைனை அனுபவிக்க வேண்டும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் சுஹைப் இல்யாசி மீண்டும் சிறை சென்று அங்கு சில ஆண்டுகள் இருந்து  தனக்கு கொடுக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இதனிடையே அஞ்சு இல்யாசி மெடிக்கல் ரிப்போர்ட்டை மறுவிசாரணை செய்து சந்தேகம் இருப்பதாகக் கூறிய மருத்துவர் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அதன்படி அவர் சரியாக ரிப்போட்களை சொல்வதில்லை என்றும் ஏனோ தானோ என வேலையைப் பார்ப்பதாக ஒரு பக்கம் அந்த மருத்துவர் மீது புகார் எழுந்துள்ளது. இதனை உச்சநீதிமன்றத்தில் சுட்டிக்காட்டிய பிறகு, சுஹைப் இல்யாசி நிரபராதி என நீதிமன்றம் தீர்ப்பளித்து அவரின் 18 வருட சட்ட போராட்டத்தை முடித்து வைத்தது.