Skip to main content

திமுக ‘முப்பெரும் விழா’ – வேலூரில் ஏற்பாடுகள் தீவிரம்

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

Preparations for the DMK triennial ceremony are going on full swing in Vellore

 

செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், செப்டம்பர் 17 பெரியார் பிறந்தநாள். அதே செப்டம்பர் 17 ஆம் தேதி 1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது. இதனை ஒவ்வொரு ஆண்டும் முப்பெரும் விழாவாக 3 நாள் விழாவாக திமுக கொண்டாடுவது வழக்கம். முப்பெரும் விழா என்பது திமுக தொண்டர்களின் உணர்வோடும், உயிரோடும் கலந்த நிகழ்வாகப் பார்க்கின்றனர்.

 

முப்பெரும் விழாவில் திமுகவின் வரலாற்றுச் சிறப்புகள் மற்றும் கொள்கைகளையும், அது கடந்து வந்த பாதையைப் பற்றியும் விளக்குவதுடன், முக்கிய விருதுகள் மற்றும் சிறப்பாகச் செயல்படும் நிர்வாகிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது என்பதால் 2024 ஆம் ஆண்டு திமுகவிற்கு சிறப்பு வாய்ந்த வருடம். அதன் தொடர்ச்சியாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவும் தொடங்கி நடைபெறுவதால் இந்தாண்டு முப்பெரும் விழா முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

 

இந்த முப்பெரும் விழா திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினின் முன்னெடுப்பில் இந்த மாதம் செப்டம்பர் 17 ஆம் தேதி வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகொண்டா அடுத்த கந்தநேரி பைபாஸ் சாலை அருகில் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்தது.

 

முப்பெரும் விழாவிற்கான அழைப்பிதழை திமுக தலைவருக்கு வேலூர் மாவட்டச் செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ நேரில் சென்று வழங்கி அழைப்பு விடுத்தார். பொதுச் செயலாளர் துரைமுருகன் உட்பட மாநில நிர்வாகிகளுக்கு அழைப்பிதழ் வழங்கினார். முப்பெரும் விழாவில் திமுக நிர்வாகிகள் மற்றும் திராவிட இயக்க நிர்வாகிகளுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிப்பதை சமீப ஆண்டுக் காலமாக வழக்கமாக வைத்துள்ளது திமுக தலைமை. அதன்படி இந்த ஆண்டு, பெரியார் விருது – மயிலாடுதுறை கி. சத்தியசீலன், அண்ணா விருது - மீஞ்சூர் க. சுந்தரம், கலைஞர் விருது – அமைச்சர் ஐ. பெரியசாமி, பாவேந்தர் விருது - தென்காசி மல்லிகா கதிரவன், பேராசிரியர் விருது - பெங்களூர் ந. இராமசாமி ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது. அதனோடு இந்த விழாவில் சிறப்பாக கழக பணியாற்றிய திமுக நிர்வாகிகளுக்குச் சான்றுகள் மற்றும் பணப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

 

Preparations for the DMK triennial ceremony are going on full swing in Vellore

 

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் திமுகவின் வெற்றியை உறுதி செய்யும் விழாவாக ’நாற்பதும் நமதே’ என்று திமுக நிர்வாகிகள் அழைக்கும் விழா என்கின்றனர். செப்டம்பர் 17 ஆம் தேதி நடக்க இருக்கும் பவள விழா மற்றும் முப்பெரும் விழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வருவார்கள் என்பதால் பிரமாண்டமாக விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

 

வேலூர் மாவட்ட திமுக நிர்வாகிகள், மா.செ நந்தகுமார் எம்.எல்.ஏ தலைமையில் ஈடுபட்டுள்ளனர். ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான கார்கள் நிறுத்தும் வசதி, பேருந்துகள், வேன்கள் நிறுத்த தனியிடம், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அமரும் அளவில் பந்தல், உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மேற்பார்வையிட்டார். இரவும் பகலும் அங்கேயே இருந்து மா.செ நந்தகுமார் தலைமையில், திமுக நிர்வாகிகள் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். இதனைப் பிரமாண்டமாக நடத்தி முடிக்க வேண்டும் எனத் தீவிரம் காட்டி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்