கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மருங்கூர் பழைய காலனி பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்தில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு அப்பகுதியின் மின்சார தேவைக்காக மின் பகிர்மான பெட்டி வைக்கப்பட்டது. ஆனால் மின் பகிர்மான பெட்டி வைக்கப்பட்ட நாள் முதல் போதிய பராமரிப்பு செய்யப்படாததால், நாள்தோறும் மணிக்கணக்காக மின்சாரம் தடைபடுவதினால், குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைத்து தரப்பினரும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும் மின்சார வசதி இல்லாததால் குடிநீருக்காக வெகுதூரம் சென்று எடுத்து வரும் அவல நிலை உள்ளதாகவும், வயல்வெளியில் உள்ள நீர் மோட்டார்களில் சென்று தண்ணீர் எடுக்கச் சொல்லும்போது, பல்வேறு மன உளைச்சலுக்கு ஆவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், எதற்கும் பயன்படாத காட்சி பொருளாக உள்ள மின்பகிர்மான பெட்டி முன்பு நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, மேலப்பாலையூர் கிராமத்தில் அமைந்துள்ள மின்நிலையத்தை முற்றுகையிட்டனர். ஆனால் மின்நிலையத்தில் அதிகாரிகள் இல்லாததால், பொதுமக்களின் கோரிக்கைகளைகூட கேட்பதற்கு ஆளில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்படும் என்று உறுதியளித்த பின்பு அமைதியாக கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.