அண்மை காலமாக தெருவில் சுற்றித்திரியும் நாய்கள் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தெரு நாய்கள் சாலையில் கூட்டம் கூட்டமாக வலம் வருவதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சாலையில் பள்ளி செல்லும் சிறுவர்கள் தொடங்கி ஓய்விற்காக நடைபயிற்சி செய்யும் பெரியவர்கள் வரை அனைவரையும் நாய்கள் ஒன்றாக திரண்டு விரட்டுகிறது. மேலும் பலரை கடித்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. இப்படியான சம்பவம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டேதான் இருக்கிறது.
அந்த வகையில் சமீபத்தில் சென்னை ராயபுரத்தில் தெரு நாய் ஒன்று பள்ளி மாணவர்கள் உட்பட 28 பேரை கடித்தது. தொடர்ந்து பலரையும் கடிக்க முயன்றதால் அப்பகுதி மக்கள் அடித்து கொன்றனர். அந்த நாயை வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ததில் நாய்க்கு வெறிநாய்(ரேபிஸ்) பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த நாய் கடித்தவர்களுக்கு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி வெறிநாய் கடிக்கான தடுப்பூசி போடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு இடங்களில் தெருநாய்களின் பிரச்சனை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிகை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருநெல்வேலியில் தெருவில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்தக் கோரி, மாநகரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. திருநெல்வேலி 36 வது வார்டை கலக்கிக் கொண்டிருக்கும் ‘அன்பு’ குழுவின் உறுப்பினர்கள் என்று தொடங்கும் அந்த போஸ்டரில், “ பெயர் - புன்னிய மூர்த்தி, வயது - 5மாதங்கள், குணம் - சண்டை இழுத்தல், கடிபட்டவர்கள் - 1; பெயர் - கலத்தூர் தட்சணா மூர்த்தி, வயது - 3, குணம் - கடித்து வைத்தல், கடிபட்டவர்கள் - 16 பேர்; பெயர் - வழுவகுடி சுந்தர மூர்த்தி, வயது - 3, குணம் - ஆண்களை மட்டும் குறிவைத்து விரட்டுதல், கடிபட்டவர்கள் - 6 பேர்; பெயர் - கலத்தூர் காலனிதெரு சத்தியமூர்த்தி, வயது - 4, குணம் - சங்க தலைவனாக பாவித்தல்; கடிபட்டவர்கள் - 10 பேர்; பெயர் - வேலக்குடி ராம் மூர்த்தி, வயது - 5, குணம் - பதுங்கி இருந்து விரட்டுதல்; கடிபட்டவர்கள் - குறிப்பிடப்படவில்லை” என்று நாய்களையும் சேர்த்து புகைப்படத்துடன் அச்சடிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த போஸ்டரில், “இவர்களை கட்டுப்படுத்த பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத வார்டு உறுப்பினர் மற்றும் நிர்வாகத்திற்கு எங்களது கோடான கோடி நன்றிகள்...” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.