Skip to main content

2 ஆயிரத்துக்கு பிள்ளைகளை விற்பனை செய்துவிட்டு குற்ற உணர்ச்சியில் செத்துப்போன தந்தை!

Published on 17/11/2018 | Edited on 17/11/2018
ve


வறுமையில் வாழ்க்கை நடத்திய சரவணனால் குடியை மட்டும் விட முடியவில்லை. இதனால் கணவன் – மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வரும். அந்த சண்டை இரவு வந்தால் காணாமல் போகும். ஊடல் கூடலாகியதன் விளைவு இந்த தம்பதிகளுக்கு 5 ஆண் பிள்ளைகள் அடுத்தடுத்த வருடங்களில் பிறந்துள்ளனர்.


சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவியுடன் சண்டை வந்து கருத்து வேறுபாட்டால் சரவணனும் – வள்ளியும் பிரிந்துள்ளனர். இதில் சற்று வளர்ந்த குழந்தைகளாக இருந்த முதல்மகன் அருண்குமார், இரண்டாவது மகன் செல்வாவை தான் அழைத்து செல்வதாக கூறிவந்துள்ளார். மீதியுள்ள 3 குழந்தைகளை வள்ளி வளர்ப்பது என முடிவாகியுள்ளது.


சரவணன், தனது இரண்டு மகன்களோடு கிருஷ்ணகிரிக்கு வந்துள்ளார். தனது பசங்களை பள்ளியில் சேர்க்காமல் நாடோடியாக வலம் வந்துள்ளார். சம்பாதிப்பது குடிப்பதுக்கே போய் விடுவதால் தனது பிள்ளைகளுக்கு சோறு வாங்கி போட முடியவில்லையே என போதையில் புலம்பியுள்ளார். இதனை கேட்டு ஊர் ஊராக போய் வாத்து மேய்ப்பவர்களான கிருஷ்ணகிரி மாவட்டம், கட்டிநாயணஅள்ளிதேவசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த பாபு, உன் பிள்ளைகளை என் புள்ளைங்களா வளர்க்கறன், எங்கிட்ட வித்துடு என போதையில் இருந்தவரிடம்  பேசி 2 ஆயிரம் ரூபாய்க்கு இரண்டு குழந்தைகளை விலைக்கு வாங்கியுள்ளார் பாபு.


அவர்களை தஞ்சை, மயிலாடுதுறை, ஆந்திராவின் குப்பம், பலமநேர் என பல ஊர்களுக்கும் வாத்துக்களோடு அழைத்து சென்று வாத்து மேய்க்கவிட்டுள்ளார். சாப்பாடும் சரியாக போடாமல் அப்பாவை பார்க்கனும் எனக்கேட்டபோதெல்லாம் அடித்த உதைத்துள்ளனர் பாபுவும், அவனது சகோதரனும்.


சில மாதங்களுக்கு முன்பு சரவணன், நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருந்த நிலையில், தன்னை பார்க்கவந்த மனைவியிடம், என் பிள்ளைகளை தெரியாம வித்துட்டேன் என கண்ணீர்விட்டு அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியாகி யாரிடம் என விசாரிக்க தகவல் கூறியுள்ளார். அடுத்த சில நாட்களில் சரவணன் இறந்துள்ளார். சம்மந்தப்பட்ட பாபுவிடம், பசங்களோட அப்பா இறந்துட்டார், கொள்ளி போடனும் பெரியவன் வேணும், அதனால பசங்கள அனுப்பிவைங்க எனக்கேட்டுள்ளார். அவன் வித்துட்டான், வித்த பொருள் எனக்குதான் சொந்தம். அதெல்லாம் திருப்பி அனுப்ப முடியாது என பேசி மிரட்டியுள்ளான். திரும்பி வந்து சரவணன் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி முடித்தனர்.


பிள்ளைகளை மீட்க என்ன செய்வது என திண்டாடிய வள்ளிக்கு சிலர் தந்த ஆலோசனைப்படி திருப்பத்தூர் நகரில் உள்ள தொண்டு நிறுவனத்திடம் நடந்ததை முறையிட்டார். அவர்கள் இதுப்பற்றி சப்-கலெக்டர் ப்ரியங்காபங்கஜத்திடம் கூறினர். அவர் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் இதுப்பற்றி தகவல் கூறியுள்ளார். அவர்கள் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுத்து தற்போது 8 வயதாகும் அருண்குமார், 7 வயதாகும் செல்வா இருவரையும் மீட்டு தாய் வள்ளியிடம் ஒப்படைத்தனர்.


நீண்ட மாதங்கள் கழித்து தாயை பார்த்ததும் பிள்ளைகள் இருவரும் தாயை கட்டிப்பிடித்து அழுதுள்ளனர். அவர்களை தொண்டு நிறுவனத்தினர் அழைத்து வந்து சப்-கலெக்டர் முன் நிறுத்தினர். வள்ளியிடம் பேசிய சப்-கலெக்டர் பசங்களை பெத்தா மட்டும் போதாதும்மா வளர்க்கனும் எனச்சொல்ல, எனக்கு வசதியில்லைங்க கூலி வேலைக்கு போறன், 5 பசங்களை எப்படி வளர்க்கறது என இயலாமையால் கூறியதும் அவரின் நிலை உணர்ந்து உடனடியாக கல்வித்துறை அதிகாரிகளிடம் பேசியதை தொடர்ந்து, கல்வித்துறை அதிகாரிகள் அருண்குமாரை 3 ஆம் வகுப்பிலும், செல்வாவை 2 ஆம் வகுப்பில் அரசு பூங்கா மேல்நிலைப்பள்ளியில் சேர்த்துக்கொண்டனர். அதோடு, அவர்களுக்கு அரசு விடுதியில் தங்கியிருந்து படிக்கவும் ஏற்பாடு செய்து தந்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்