தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 2 கோடிக்கான சாலைப்பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு இன்று (10/02/2020) காலை 10.00 மணியளவில் அதற்கான விழா பேரூராட்சியின் செயலர் சாந்தியின் பொறுப்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.பி்.பிரபாகரன் வந்திருந்தார். நிகழ்ச்சியை அ.தி.மு.க.வின் நகரச் செயலாளரும், காண்ட்ராக்டருமான சங்கர் ஏற்பாடு செய்திருந்தார். இதனையறிந்த தொகுதி எம்.எல்.ஏ.வான தி.மு.க.வின் பூங்கோதையும் இங்கு வர, தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தொண்டர்களும் திரண்டிருக்கிறார்கள். ஆனால் முறைப்படி இந்த நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டிய எம்.எல்.ஏ. பூங்கோதையை நிர்வாகம் அழைக்கவில்லையாம். காரணம் இந்தத் திட்டத்தை நாமே கொண்டு வந்தாக வெளியே தெரியப்படுத்த வேண்டும் என்று அ.தி.மு.க. வின் நகர செயலாளரும், முன்னாள் எம்.பி. பிரபாகரன் இருவரின் திட்டமாம்.
ஆனால் இவர்கள், எம்.எல்.ஏ. பூங்கோதை அங்கு வருவார் என எதிர்பார்க்கவில்லையாம். வந்த எம்.எல்.ஏ. இது அரசு நிகழ்ச்சி் என்னை அழைக்கவில்லை. ஆனால் நிதி பெற்றுத் தந்தது நான். அப்படியிருக்க முன்னாள் எம்.பி.யை எப்படி அழைக்கலாம் என்று பேரூராட்சி செயலர் சாந்தியிடம் விபரம் கேட்க, செயலரோ எனக்கு கோர்ட் வேலையிருக்கிறது என்று கிளம்பி விட்டாராம்.
அது சமயம் முன்னாள் எம்.பி்.பிரபாகரன், இது அரசு ஒதுக்கிய பணம். நாங்கள்தான் நிகழ்ச்சியை நடத்துவோம் என்று எதிர் வாக்குவாதம் செய்ய, எம்.எல்.ஏ. பூங்கோதையோ, எனது தொகுதி. நான் ஊரக வளர்ச்சித்துறை மூலம் பெறப்பட்ட நிதி. மக்கள் வரிப்பணம். இதில் நீங்கள் நிகழ்ச்சி நடத்தக் கூடாது. ஒரு முன்னாள் எம்.பி. நீங்கள் எப்படி வரலாம். என்று பதிலுக்குக் கேட்க, வந்திருந்த இரண்டு கட்சியினருக்குள்ளே பரபரப்பு ஏற்பட்டது. இதனால் இருதரப்பினரும் கோஷமிட்டனர். மோதல் சூழல் நிலைமை திசை திரும்புவதையறிந்த முன்னாள் எம்.பி. பிரபாகரன், இருவரும் சேர்ந்தே நடத்தலாம் என்று எம்.எல்.ஏ.விடம் சமாதானம் பேச, பின்பு ஒரு வழியாக நிகழ்ச்சி முடிந்திருக்கிறது.
எம்.எல்.ஏ. என்ற வகையில் எனது தொகுதிக்கு நான் செய்ய வேண்டிய திட்டப் பணியை நானே ஏற்பாடு செய்து கொடுத்தேன். அதை நான் ஒரு நிகழ்ச்சியாகக் கூட நடத்த நான் நினைக்கவில்லை. ஆனால் அ.தி.மு.க. நகர செயலாளரும், எம்.பி.யும் திட்டமிட்டு தாங்கள் கொண்டு வந்ததாக மக்களைத் திசை திருப்பவே இந்த ஏற்பாடு. எம்.பி.யின் பதவி முடிந்து விட்டது. அவருக்கு இங்கு என்ன வேலை. அவர் வந்ததால்தான் விவகாரமானது என்கிறார் எம்.எல்.ஏ.பூங்கோதை.
பதவி காலாவதியானாலும் அரசியலில் முகவரி இருக்க வேண்டும். தவறினால் அரசியல் உலகம் ஒதுக்கித் தள்ளிவிடுமே என்ற அரிச்சுவடிதான் அடிப்படை போல.