
கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்டது கோணக்கரை கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வந்த சிவக்குமார் என்பவர் கடந்த கடந்த ஆண்டு ஜூன் 01ஆம் தேதி (01.06.2024) தனது மனைவியான செங்கொடியை நடத்தையில் சந்தேகப்பட்டு குழவிக்கல்லால் தாக்கி கொலை செய்துள்ளார். இது சம்பந்தமாக இறந்தவரின் மகன் சங்கேஸ்வரன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட சிவக்குமார் மீது உப்பிலியபுரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான விசாரணை திருச்சி மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் (PDJ) நடைபெற்றுவந்தது. இந்நிலையில் நேற்று (28.03.2025) அரசு தரப்பு வழக்கறிஞராக சவரிமுத்து ஆஜராகி வாதிட்டார். இதனையடுத்து நீதிபதி கிறிஸ்டோபர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆயுள்தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார். இவ்வழக்கில் குற்றவாளிக்குத் தண்டனை பெற்று தந்தமைக்காக துறையூர் காவல்நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்களைத் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. செல்வநாகரத்தினம் பாராட்டினார்.