தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள ரெட்டவயல் கிராமத்தில் உள்ள கண்ணாயிரமூர்த்தி கோயில் குதிரை எடுப்பு, கிடா வெட்டு பூஜை திருவிழா நேற்று நடைபெற்றது. இந்த திருவிழாவிற்குப் பாதுகாப்புப் பணிக்கு பேராவூரணி காவல் நிலையத்தில் இருந்து கூடுதல் போலீசார் கேட்டிருந்த நிலையில் தஞ்சாவூர் ஆயுதப்படையில் இருந்து ஏராளமான போலீசர் அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் தஞ்சாவூர் ஆயுதப்படையில் இருந்த அரியலூர் மாவட்டம் பெரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் மகள் சுபபிரியாவும் பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று மாலை கோவில் குதிரை எடுப்பு திருவிழா முடிந்ததையடுத்து, பாதுகாப்பு பணியில் இருந்த சுபபிரியா தனது சக காவலர்களுடன் ஓய்வு எடுப்பதற்காகத் தற்காலிகமாகத் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மண்டபத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த தண்டாயுதபாணி ஓட்டிவந்த இருசக்கர வாகனம் சுபபிரியா மீது மோதியதில் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு சக காவலர்கள் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காகத் தஞ்சாவூருக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சுபபிரியா உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து விபத்து ஏற்படுத்திய தண்டாயுதபாணியை பேராவூரணி போலிசார் கைது செய்துள்ளனர்.
பெண் காவலர் விபத்தில் உயிரிழந்த தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், “படித்துக் கொண்டிருக்கும் இரண்டு தங்கைகள், கட்டிடத் தொழிலாளியான அண்ணன் என ரொம்ப வறுமையான குடும்பத்தில் பிறந்து முதல் அரசு வேலைக்குச் சென்று குடும்ப பாரம் சுமந்து வந்த சுபபரியா இப்படி பலியாகிவிட்டாரே.. இனி இந்த குடும்பத்தை யார் சுமப்பா...” என்று கிராமத்தினரும், உறவினரும் கதறி அழுதனர். முதலமைச்சர் மனது வைத்து அவரது குடும்பத்தில் வேறு ஒருவருக்கு அரசு வேலை வழங்கி குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர்.