உலக பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கக்கூடியது பழனி முருகன் கோவில். இந்த பிரம்மாண்ட கோவிலுக்கு, சாதாரண நாட்களிலேயே வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும், முக்கியத்துவம் வாய்ந்த பெருவிழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அந்த வகையில், பழனி நகர காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் பிரபு. இவர்.. பழனி தாராபுரம் சாலையில் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம்.
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காவலர் பிரபு அதே பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அந்த வழியாக செல்லும் வாகனங்களை நிறுத்தி.. அதன் ஆவணங்களை சரிபார்த்து வந்துள்ளார். மேலும், விதிகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதித்திருந்தார். இதற்கிடையில், அந்த வழியாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துகொண்டிருந்தார். அப்போது, அந்த வாகனத்தை ஓட்டி வந்தவரிடம் நீங்கள் எங்கே வேலை செய்கிறீர்கள் என காவலர் பிரபு கேட்டுள்ளார். அதற்கு, அந்த வாகன ஒட்டி தான் பழனி கோவிலில் ஊழியராக உள்ளதாக கூறியுள்ளார்.
ஒருகணம், இதை கேட்டு விரக்தியடைந்த காவலர் பிரபு, "ஓ கோவில்ல வேலை செய்றியா? இந்த தேவஸ்தானம் போர்டுலாம் ஓவரா பண்ணிட்டு இருக்காங்க. ஒரு போலீஸ் கோவிலுக்குள்ள போக முடியல. யூனிபார்ம்ல போனா கூட ஐடி கார்டு கேக்குறாங்க" என கடிந்து கொட்டினார்.
அதைத்தொடர்ந்து, காவலர் பிரபு பேசும்போது, "அந்த கோயில்ல இருக்கான்ல ஒரு ஆணையாளர்.. அவன் ஐபிஎஸ் முடிச்சானா இல்ல ஐஏஎஸ் முடிச்சானா? ஏன் அவ்ளோ பண்றானுங்க" என அவர்களை ஒருமையிலும் தகாத வார்த்தையிலும் திட்டித் தீர்த்தார். அதுமட்டுமின்றி, "உங்க பவர் எல்லாம் கேட்டுக்குள்ள தான். நீங்க கோயிலுக்குள்ள தான் சண்டியர்.. ஆனா.. வெளிய நாங்க தான் சண்டியர்.. வெளிய சிக்கினா கண்டிப்பா விடமாட்டேன். நிச்சயமா கேஸ் போடுவேன்" என மிரட்டும் தொனியில் பேசியிருந்தார்.
அப்போது, இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த கோயில் ஊழியர், "காவலர் பிரபு பேசுவதை தனது செல்போனில் மறைத்து வைத்துக்கொண்டு முழுவதுமாக வீடியோ எடுத்துள்ளார். அதன்பிறகு, இந்த வீடீயோவை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இத்தகைய சூழலில், இந்த வீடியோ வைரலான நிலையில்.. அது கோயில் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இதில் கோயில் ஆணையரை தரக்குறைவாக பேசி மிரட்டல் விடுக்கும் காவலர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தற்போது, கோயில் ஊழியரை தரக்குறைவாக பேசிய காவலரின் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.