பண்ருட்டி - கடலூர் செல்லும் சாலையில் உள்ளது நெல்லிக்குப்பம். இந்த கிராமம் தென்பெண்ணை ஆற்றங் கரையை ஒட்டி உள்ளது. சமீப காலமாக மணல் தட்டுப்பாடு அதிகம் உள்ளதால் இந்த கிராமத்தைச் சேர்ந்த பலர் ஆற்றில் இருந்து மாட்டு வண்டி மூலம் ஆற்றில் மணலை கொண்டு வந்து தங்கள் கிராமத்தில் உள்ள வீடுகள் மற்றும் திறந்தவெளி பகுதிகளில் ஆங்காங்கே குவியல் குவியலாக சேமித்து வைத்து அதை லாரிகள் மூலம் வெளியூர்களுக்கு ஏற்றி அனுப்பி விற்பனை செய்வதாக துக்கணாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் தவச்செல்வன் தலைமையிலான போலீசார் அதிகாலை நேரத்தில் கிராமத்திற்குள் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அந்த கிராமத்தில் இருபதுக்கும் மேற்பட்ட வீடுகள் அதை சுற்றி உள்ள திறந்த வெளிப்பகுதிகள் ஆகிய இடங்களில் குவியல் குயிலாக மணலை குவித்து வைத்திருந்தனர். இந்த மணல் அனைத்தும் தென்பெண்ணை ஆற்றில் இருந்து திருட்டுத்தனமாக கொண்டு வந்து சேர்க்கப்பட்டது என போலீசார் விசாரணையில் தெரிந்து கொண்டனர்.
இதுகுறித்து போலீசார் அங்கு ஆய்வு செய்து கொண்டிருந்த போது, சிலர் ஆற்றில் இருந்து மணலை மாட்டு வண்டிகளில் ஏற்றிக் கொண்டு வந்தனர். மேலும் சிலர் மினி லாரிகளில் மணலை ஏற்றி வெளியூருக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். இதையெல்லாம் நேரில் கண்ட போலீசார் மணல் ஏற்றிய மினி லாரி மற்றும் மாட்டு வண்டிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்ய முயன்றனர். அப்போது மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்யவும் முயற்சி மேற்கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த அந்தக் கிராம மக்கள் ஒன்று திரண்டு வந்து மணலை பறிமுதல் செய்யக்கூடாது என்று முற்றுகையிட்டு போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைப் பயன்படுத்திக் கொண்ட மணல் கடத்தல்காரர்கள் தப்பி ஓடிவிட்டனர். அதில் இரண்டு மினி லாரிகளை மட்டும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றை தூக்கணாம்பாக்கம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இந்த மணல் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறி புதுச்சேரி மாநிலம் கொம்பாக்கத்தைச் சேர்ந்த வேல்முருகன், குருவி நத்தம் நடராஜன் உட்பட 16 நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். மேலும் அங்கு திருட்டுத்தனமாக கொண்டு வந்து குவிக்கப்பட்டிருந்த மணலையும் பறிமுதல் செய்வதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.