தூத்துக்குடியை அடுத்த வேம்பார் கடற்பகுதியில் கடற்பொருட்கள் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலால் அலர்ட் ஆன க்யூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையிலான க்யூ பிரிவு எஸ்.ஐ ஜீவமணி, தர்மராஜ் உள்ளிட்ட போலீசார் வேம்பார் பகுதியில் கண்காணிப்பிலிருந்தனர். அது சமயம், அக்கரை பகுதியிலிருந்து கடற்கரைக்கு வந்த லோடு வேன் ஒன்றில் அளவுக்கதிகமான சரக்கு மூட்டைகள் ஏற்றப்பட்டு தார்ப்பாயால் மூடப்பட்டிருந்தது சந்தேகத்தைக் கிளப்பவே, க்யூ பிரிவு போலீசார் அந்த லோடு வேனை மடக்க முயற்சித்த போது, அந்த வாகனம் நிற்காமல் வேகமெடுத்திருக்கிறது.
க்யூ பிரிவு போலீசார் அந்த வேனை விரட்டிய போது தரைக்குடி தங்கம்மாள்புரம் வழியாக கிராம வழிச்சாலைகளின் மூலமாக சூரங்குடி நோக்கி வேன் விரைய, தொடர்ந்து விரட்டிய போலீசார் சூரங்குடி கிழக்கு கடற்கரை சாலையில் மடக்கிப் பிடித்திருக்கிறார்கள். அதனைச் சோதனையிட்ட போது 10 மூட்டைகள் சுறா மீன் இறக்கைகள், 11 மூட்டை திருக்கை மீன் பூ உள்ளிட்ட கடல் செல்வங்களிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து வேனை ஓட்டி வந்த ராமநாதபுரம் மாவட்டத்தின் வேதாளை பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரைக் கைது செய்து விசாரித்திருக்கிறார்கள். இவை அனைத்தும் கடல்மார்க்கமாக இலங்கைக்கு கடத்தவிருப்பது தெரிய வந்திருக்கிறது. இதன் பின் க்யூ பிரிவு போலீசார் அவற்றை லோடு வேனுடன் பறிமுதல் செய்திருக்கிறார்கள். சிக்கிய சுறாமீன் இறக்கைகள் மற்றும் திருக்கை மீன் பூ ஆகியவை இலங்கைக்கு கடத்தப்பட்டு அங்கிருந்து சீனாவுக்கு கொண்டு செல்லப்படவிருந்தது. கடல் செல்வங்கள் என்பதால் பிடிபட்டவரையும், மூட்டைகளையும் வனத்துறையினரிடம் ஒப்படைத்து விட்டோம். இவை சீனா கொண்டு செல்லப்பட்டு அங்கு உணவிற்கான சூப்பும் மற்றும் மருந்துகளும் தயாரிக்கப்படுகிறதாம். இதன் இங்குள்ள மதிப்பு 80 லட்சத்திற்கும் மேல் என்றாலும் சீனாவில் இரண்டு கோடியைத் தாண்டும் என்கிறார்கள் க்யூ பிரிவு போலீசார்.
இதனிடையே கைப்பற்றப்பட்ட சுறா மீன் இறக்கைகள் மற்றும் திருக்கை மீன் பூ மூட்டைகளை விளாத்திகுளம் வனத்துறையினர் தீ வைத்து அழித்ததுடன் கடத்தல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.