விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் திட்ட இயக்குனராக உள்ளவர் மகேந்திரன். இவர் கடலூர் மாவட்ட இயக்குனராகவும் கூடுதல் பொறுப்பு அதிகாரியாகவும் உள்ளார். இவர் வீட்டில் இன்று காலை 7 மணியளவில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் டி.எஸ்.பி. தேவநாதன் தலைமையிலான டீம் திடீரென சோதனை நடத்தியது.
இதனிடையே மகேந்திரன் அலுவலகத்திற்கு வந்த சில ஊழியர்கள் அங்கிருந்த கட்டுக்கட்டான ஆவணங்களை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் ஆழ்குழாய் கிணறு அமைத்ததில் முறைகேடு நடந்துள்ளது என மகேந்திரன் மீது சென்னையில் உள்ள அதிகாரிகளுக்கு புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது.
மகேந்திரனுக்கு சொந்தமான திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக ரொக்க பணம் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் இவரோடு மிக நெருக்கமாக உள்ள அரசு அதிகாரிகளும் கலக்கத்தில் உள்ளனர்.