தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து, ஆத்தூரில் கடையடைப்பு நடத்திய வணிகர்களை காவல்துறையினர் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பல்வேறு கிராமங்கள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், நேற்று திரண்டு சென்று போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது காவல்துறையினர் திடீரென்று துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 12 பேர் பலியாயினர். பலர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு மற்றும் காவல்துறையினரைக் கண்டித்து சேலம் மாவட்டம் ஆத்தூரில் நேற்று இரவு தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, இன்று (மே 23, 2018) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தனர். நாம் தமிழர் கட்சியினரும் ஒருங்கிணைந்து இதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.
ஆத்தூர் பழைய பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் பலர் கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்து இன்று காலையில் 80 சதவீதம் பேர் கடைகளைத் திறக்கவில்லை. சிறு சிறு டீக்கடைகள் முதல் பெரும் நிறுவனங்கள் வரை மூடப்பட்டு இருந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் நகர காவல்துறை ஆய்வாளர் கேசவன் மற்றும் காவல்துறையினர், வணிகர்களை சந்தித்து கடைகளைத் திறக்கும்படி கோரினர். ஆரம்பத்தில் அவர்கள் மறுத்தனர். பின்னர், முன்னனுமதியின்றி கடையடைப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நாளைக்கு ஏதாவது பிரச்னை என்றால் காவல்துறையினர் ஆதரவு கிடைக்காது என்றும் மிரட்டினர். இதனால் ஒரு சில மணி நேரங்களில் அனைத்து கடைகளும் வழக்கம்போல் திறக்கப்பட்டன.
காவல்துறையினரின் நடவடிக்கையைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர், ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் மணிக்கூண்டு அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக தரையில் அமர்ந்தனர். சில நிமிடங்களில் அவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில அமைப்புக்குழு உறுப்பினர் ராஜலிங்கம் கூறுகையில், ''தூத்துக்குடியில் நடந்த மாபெரும் துப்பாக்கிச்சூட்டில் பலர் இறந்துள்ளனர். இதைக் கண்டித்து, உணர்வுகளின் அடிப்படையில் கடையடைப்பு போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தோம். வணிகர்களும் இதற்கு ஒத்துழைப்பு அளித்தனர்.
ஆனால், ஆத்தூர் காவல்துறையினர் கீழ்த்தரமான முறையில் கடைக்காரர்களை மிரட்டினர். உணர்வுப்பூர்வமாக போராட்டத்தில் கலந்து கொண்ட வணிகர்களை காவல்துறையினர் மிரட்டுவதை கைவிட வேண்டும். இதை வன்மையாக கண்டிக்கிறோம். எடப்பாடி அரசு, யாருக்காக சேவை செய்கிறது? மக்களுக்காக சேவை செய்கிறதா? அல்லது பெருமுதலாளிகளுக்காக இந்த அரசு இயங்குகிறதா? என்று பதில் சொல்ல வேண்டும். ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதை கண்டிக்கிறோம்,'' என்றார்.