குமரி மாவட்டம் குளச்சல் பெத்தேல்புரத்தை சேர்ந்த வர்க்கீஸ், தனது மனைவி ஞானத்தாய் (33) மகள் ஐஸ்வர்யா (5) ஆகியோருடன், அதே பகுதியில் ஜெசிமோள் (46) என்பவரின் வீட்டில் வாடகைக்கு வசித்து வருகின்றனர். ஜெசிமோளும், ஞனத்தாயும் தோழிகள். இதில் ஜெசிமோள் வீட்டில் பள்ளி மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் அங்குள்ள தனியார் பள்ளியில் ஞனத்தாயின் மகள் ஐஸ்வர்யா 1-ம் வகுப்பு படித்து வருகிறார். இவள் கணிதம் பாடத்தை தவிர மற்ற பாடங்களில் அதிக மதிப்பெண் எடுத்து நன்றாக படிக்கும் மாணவி. இருப்பினும் கணிதம் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் ஐஸ்வர்யா எடுக்க வேண்டுமென கருதிய தாயார் ஞானத்தாயின் தனது தோழியான ஜெசிமோளிடம் டியூசனுக்கு அனுப்பினாள்.
தற்போது காலாண்டு தேர்வு நடந்து வருவதால், அதில் மாணவி ஐஸ்வர்யா கணிதத்தில் 100 மதிப்பெண் எடுக்க ஆசிரியை ஜெசிமோள் இரவு பகலாக படிக்க மாணவி ஐஸ்வர்யாவை கஷ்டப்படுத்தி வந்தாள். இதனால் மனச்சோர்வு அடைந்த ஐஸ்வர்யா சரியான முறையில் படிக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை சமையல் செய்யும் கரண்டியால் மாணவியின் முதுகு கைவிரல்களில் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் காயம் பலமாக இருந்ததால் மாணவியை அன்று வீட்டுக்கு விடாமல் தன்னுடைய வீட்டில் தங்க வைத்து அடுத்த நாள் வெள்ளிக்கிழமை அங்கியிருந்தே மாணவியை பள்ளிக்கு அனுப்பினார் ஆசிரியை. அன்று பள்ளிக்கு சென்ற மாணவி தேர்வு எழுத முடியாமல் வலியால் அழுது கொண்டியிருந்தாள். இதை பார்த்த ஆசிரியர் மாணவியிடம் விசாரித்த போது டியூசன் ஆசிரியை தாக்கியதை கூறினாள்.
இதனை தொடர்ந்து மாணவியின் பெற்றோருக்கு வரவழைத்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடமும் புகார் செய்தனர். பின்னர் குளச்சல் அனைத்து மகளிர், காவல்நிலையத்திலும் டியூசன் ஆசிரியை ஜெசிமோள் மீது தாயார் ஞானத்தாய் புகார் கொடுத்து மாணவியை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது சம்மந்தமாக மகளிர் போலீசார் விசாரணை நடத்தி ஜெசிமோள் மீது வழக்குப்பதிவு செய்து நேற்று மாலை அவரை கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.