தீபா - மாதவன் - ராஜா ஆகியோரிடையே தீபா வீட்டுக்கு வெளியே புதன்கிழமை வாக்குவாதம்
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் தீபா வீடு அமைந்துள்ள தியாகராயர் சிவஞானம் தெருவில் உள்ள தீபாவின் வீட்டில் இன்று தீபா, தீபாவின் கணவர் மாதவன், தீபா பேரவையில் இருந்த நீக்கப்பட்ட ராஜா ஆகியோரிடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இதனையடுத்து போலீசார் வந்து மூன்று பேரையும் சமாதானம் செய்தனர். பின்னர் ராஜா அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இந்த நிலையில் மாதவன் மீண்டும் தீபா வீட்டுக்குள் அழைத்து வரப்பட்டால் அவரை உயிருடன் விடமாட்டேன் என்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையில் இருந்து நீக்கப்பட்ட தீபாவின் கார் டிரைவர் ராஜா மிரட்டியதாக போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தீபா பேரவையில் தலைமை நிலைய தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வரும் சிவகுமார் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஏற்கனவே இது தொடர்பாக ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த தகவல் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.
அந்த புகார் மனுவில், தீபா பேரவையில் ராஜா பல்வேறு குளறுபடிகளை செய்து வருவதாகவும், தினகரன் கட்சியினருடன் அவருக்குத் தொடர்பு உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எங்கள் பேரவையில் இருந்து கொண்டே, எங்கள் தலைமையின் குடும்ப வாழ்வுக்கும், அரசியல் வாழ்வுக்கும் இடையூறு செய்வதுடன், அதனை தட்டிக் கேட்ட என்னை ஜுலை மாதம் 26ஆம் தேதி மாலை தலைமை அலுவலகத்திற்குள் வைத்து, இனிமேல் இங்கு வரக்கூடாது எனவும், எங்களது தலைவியைச் சந்திக்க கூடாது எனவும் அதை மீறி செயல்பட்டால் கொலை செய்துவிடுவேன் என்றும் ராஜா மிரட்டல் விடுத்தார்.
மாதவன் மீண்டும் தீபா வீட்டுக்குள் அழைத்து வரப்பட்டால் அவரையும் உயிருடன் விடமாட்டேன், உன்னால் முடிந்ததைச் செய்துகொள் என்று சவால் விடுத்தார். தொடர்ந்து மாதவனை அவருடைய சொந்த வீட்டிற்குள் வரவிடாமல் செய்வதன் மூலம் எங்கள் தலைவியே செயல்பட முடியாமல் செய்வதுடன், அவருக்கு எதிராக சதி வேலையை செய்து வருகிறார். எனவே ராஜாவை பற்றியும் அவருக்கு பின்னணியில் செயல்படும் நபர்கள் பற்றியும் விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எனக்கோ என்னுடன் இருப்பவர்களுக்கோ எனது குடும்பத்திற்கோ, ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அதற்கு முழு பொறுப்பு ராஜா மற்றும் அவரது பின்னணியில் செயற்படுபவர்கள் மட்டுமே என்று தெரிவித்துக் கொள்கிறேன் என கூறப்பட்டுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகி உள்ளன.