திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே ரெட்டிமாங்குடி கடைவீதி பகுதியில் அதிமுக நிறுவனத் தலைவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் உருவச் சிலை கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் தேதி அமைக்கப்பட்டது. இந்தச் சிலையை கடந்த மாதம் 22 ஆம் தேதி சமூகவிரோதிகள் சிலர் அடித்து உடைத்து சேதப்படுத்தினர். மேலும் சிலை மீது மாட்டு சாணத்தை பூசிச் சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் சிலையை அடித்து உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ரெட்டி மாங்குடி கடைவீதி பகுதியில் அன்றைய தினமே புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் காவல் நிலையத்தில் புகாரும் கொடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சேதப்படுத்தப்பட்ட எம்.ஜி.ஆர் சிலையைப் புதுப்பித்து மீண்டும் அதே இடத்தில் அதிமுகவினர் வைத்தனர். இந்த நிலையில் நேற்று மீண்டும் மர்ம நபர்கள் எம்.ஜி.ஆரின் சிலையை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனால் கடும் கோபமடைந்த அதிமுகவினர், சம்பவ இடத்தில் ஒன்று திரண்டனர். இதனை அறிந்த லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கம் தலைமையில், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். பின்னர் அதிமுகவின் புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகளுடன் லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கம் சிறுகனூர் காவல் ஆய்வாளர் சுமதி உள்ளிட்ட போலீசார் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
சிலையை உடைத்த நபரைக் கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இந்நிலையில் சிலையை உடைத்த நபர் குறித்து சிறுகனூர் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ரெட்டிமாங்குடி நடுத்தெருவைச் சேர்ந்த 47 வயதான செந்தில்குமார் எனத் தெரிய வந்தது. பின்னர் அவரைப் பிடித்த சிறுகனூர் போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.