
ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து ஈரோடு பேருந்து நிலையத்திற்கு கடந்த 16ம் தேதி காலை அரசு டவுன் பேருந்து சென்றுகொண்டிருந்தது. காளைமாட்டு சிலை நிறுத்தம் அருகே பேருந்து வந்தபோது அங்கு நின்றுகொண்டிருந்த ஒரு வாலிபர் திடீரென பேருந்து முன் பாய்ந்தார். இதில் பேருந்தின், முன் சக்கரம் அந்த வாலிபர் மீது ஏறி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதைப் பார்த்து பேருந்துக்காக நின்றுகொண்டிருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சூரம்பட்டி போலீசார், அந்த வாலிபரின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இறந்த வாலிபருக்கு 30 வயது இருக்கும். ஆனால் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரம் உடனடியாகத் தெரியவில்லை. சி.சி.டி.வி. கேமரா காட்சிகளைக் கொண்டு வாலிபர் பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.