குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம், கம்பர் தெருவைச் சேர்ந்தவர் மனோகரன்(50), இவரது மகன் நிஷாந்த்(25), லோடு வேன் ஓட்டி வந்தார். கடந்த புதன் கிழமை வீட்டின் அருகே அமர்ந்து செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தபோது பின்னால் வந்த மர்ம நபர்கள் நிசாந்தை ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில் தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
கொலை சம்பவத்தில் ஈடுபட்டது அதே பகுதியைச் சேர்ந்த அஜித்(24), அவரது தம்பி கவியரசு(22) மற்றும் இவர்களது நண்பர்கள் எனத் தெரிய வந்த நிலையில் கொலையாளிகளைத் தீவிரமாக தேடி வந்தனர். இதையடுத்து மாமல்லபுரம் பகுதியில் பதுங்கி இருந்தவர்களை இருசக்கர வாகனத்தில் சினிமா பட பாணியில் சேசிங் செய்து அஜித், கவியரசு, கார்த்திக் உள்ளிட்ட 6 பேரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், கடந்த ஆண்டு அஜித் மற்றும் நிஷாந்த்க்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக அஜித்தை நிஷாந்த் கத்தியால் வெட்டியுள்ளார். இதில் நிசாந்த் சிறைக்குச் சென்று வெளியே வந்த நிலையில், இருவருக்கும் இடையே பகையானது அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நிஷாந்தை கொலை செய்யத் திட்டம் தீட்டி தனியாக இருந்த நிஷாந்தை அஜித் அவரது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு அன்றைய இரவு சோமங்கலத்தில் உள்ள காட்டில் பதுங்கி உள்ளனர். பின்னர் அதிகாலையில் எழுந்து மாமல்லபுரம் பகுதியில் உள்ள நண்பர் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்தபோது, நீதிமன்றத்தில் சரண் அடையச் செல்வது தெரிய வந்த நிலையில் போலீசார் விரட்டிச் சென்றனர். போலீசார் வருவதை அறிந்ததும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வேகமாகத் தப்பிச் செல்ல முயன்றனர். சினிமா பட பாணியில் போலீசார் சேசிங் செய்து அவர்களை அங்கேயே மடக்கிப் பிடித்து கைது செய்யப்பட்டனர் எனத் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் அஜித் அவரது தம்பி கவியரசு இவர்களது அண்ணன் தியாகராஜன், நண்பர்கள் கார்த்திக் உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏரியாவில் யார் பெரிய ஆளாக வலம் வருவது மற்றும் இருவருக்கும் இடையேயான முன் விரோதம் ஆகியவற்றால் இந்த கொலை சம்பவம் அரங்கேறியதும், இந்த கொலை சம்பவத்தில் ஒரே குடும்பத்தில் அண்ணன், தம்பிகள் மற்றும் அவர்களது நண்பர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் போலீசார் பிடிக்கும்போது தப்பி ஓடியதில் அஜித், கார்த்திக் உள்ளிட்ட நான்கு பேருக்கு கால் மற்றும் கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.