உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி ஆபாஷ்குமார் உத்தரவின்பேரில், காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன், துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் ஆகியோர் மேற்பார்வையில், திருச்சி மாநகருக்கு உட்பட்ட சஞ்சீவி நகரில் நேற்று (22.09.2021) அதிகாலை 3 மணி அளவில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள அலி என்பவரின் கடைக்கு முன்புறமாக உள்ள காலி இடத்தில் ஒரு டேங்கர் லாரி நிறுத்தப்பட்டிருந்தது. அதனருகே சரக்கு வேனும் நிறுத்தப்பட்டிருந்தது.
இதனால் சந்தேகமடைந்த உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள், அங்கு சென்று அந்த வாகனத்தை சோதனையிட்டனர். அதில், சரக்கு வாங்கி வந்த இரண்டு பாட்டில்களிலும் மண்ணெண்ணெய் இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக வாகனங்களின் அருகே நின்றுகொண்டிருந்த பாலக்கரை கூட்ஷெட் ரோடு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், திருச்சி முதலியார் சத்திரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் குறைந்த விலைக்கு கள்ளத்தனமாக ரேஷன் மண்ணெண்ணெய்யை வாங்கி வைத்தது தெரியவந்தது.
இதையடுத்து, 2 பேர் மீதும் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து, அவர்களை கைது செய்தனர். மேலும், டேங்கர் லாரியில் இருந்த 2,000 லிட்டர் மண்ணெண்ணெய், சரக்கு வேனில் இரும்பு பொருட்களில் பதுக்கிவைத்திருந்த 800 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய், டேங்கர் லாரி ஆகியவற்றைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.